வெள்ளி, 17 டிசம்பர், 2021

சாதி ஆணவக் கொலை அல்ல… குடி பெருமை கொலை: சீமான் ஆரம்பித்த புதிய சர்ச்சை

 நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாதி ஆணவக் கொலை என்கிறார்கள், நான் அதை குடிபெருமைக் கொலை என்பேன், ஏனென்றால், சாதி தமிழில்லை. தமிழனுக்கு சாதி இல்லை என்று கூறி தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஆரம்பித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து இருவேறு சாதிகளைச் சேர்ந்த ஆண் – பெண் காதலித்து திருமணம் செய்துகொள்கிறபோது, சாதி மற்றும் குடும்ப கௌரவம் என்று கூறி ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்படுகிற கொடூர சாதி ஆணவக் கொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், தமிழகத்தில் கிட்டத்தட்ட 100 சாதி ஆணவக் கொலைகள் நடந்திருப்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டார். இதனால், தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுக்கவும் தனியாக புதிய சட்டம் ஒன்றை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தலித் இயக்கங்கள், தலித் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மன்னார்குடியில் நடந்த கட்சியில் பேசியபோது, சாதி ஆணவக் கொலை, சாதி ஆணவக் கொலை என்பார்கள். நான் அதை குடி பெருமைக் கொலை என்பேன். ஏனென்றால், சாதி தமிழில்லை. தமிழனுக்கு சாதியில்லை. நாங்கள் குடிகள்தான்.” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கௌரவக் கொலை (Honour Killing) என்ற வார்த்தை அத்தகைய கொலைகளை நியாயப்படுத்துவதாக புனிதப்படுத்துவதாக இருக்கிறது என்பதால்தான், அதை தமிழில் குறிப்பிடும்போது எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பலரும் சாதி ஆணவக் கொலை என்று குறிப்பிட்டனர். இந்த சூழலில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதி ஆணவக் கொலையை குடி பெருமைக் கொலை என்று கூறி அதை நியாயப்படுத்துவதாக உள்ளது என்று சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்கள் பலரும் சீமானை விமர்சித்து வருகின்றனர்.

சாதி ஆணவக் கொலையை குடி பெருமைக் கொலை என்று கூறிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பலரும் விமர்சித்து வருகின்றனர். சீமான் இதுவரை எந்த இடத்திலும் சாதி ஆணவக் கொலையைக் கண்டித்து ஒரு போராட்டம்கூட பண்ணல, ஆனால், நாம் தமிழர்னு மட்டும் கூப்பிடனுமா? என்று நெட்டிசன் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதே நேரத்தில், இதற்கு முன்பு சீமான், தமிழ்நாட்டில் குடுபெருமை இல்லை என்று பேசிய வீடியோவைப் மீண்டும் பதிவிட்டு சீமான் மாறி மாறி பேசுகிறார் என்றும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சீமான் பேசிய அந்த பழைய வீடியோவில், “நான் சாதிக்க வந்தவன் சாதிக்கு வந்தவன் இல்லை. எனக்கு குடி பெருமை கிடையாது. இனப் பெருமைதான். மொழிப்பெருமைதான் இனப் பெருமை. அதனால், எனக்கு குடிப் பெருமை கிடையாது” என்று கூறுகிறார். சீமானின் இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு, முன்னுக்கு பின் முரணாக மாற்றி மாற்றி பேசுவதே சீமானின் வழக்கம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

“இனி எவரும் சாதி “ஆணவக்கொலை”னுலாம் சொல்லக்கூடாது; அண்ணன் சொல்வதை போல “குடிப்-பெருமை” கொலை-னுதான் சொல்லவேண்டும்… இதைவிட சிறந்தமுறையில் எவராலும் ஆணவக்கொலைகளை நியாயப்படுத்தவே முடியாது” ஒரு நெட்டிசன் சீமானின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அம்பேத்கரிய பார்வையில் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கும் ஸ்டாலின் தி, நாம் தமிழர் சீமானின் இந்த பேச்சு குறித்து குறிப்பிடுகையில், “குடி பெருமை கொலை என்று சாதிய ஆணவக் கொலையை ஊக்கப்படுத்தி சீமான் பேசியதை வெறுமனே கேலி செய்து கொண்டிருக்காதீர்கள். சீமானின் இந்த பேச்சு இன்னும் பல சாதி ஆணவக் கொலைகளுக்கு வழி வகுக்கும் தூண்டுதல் பேச்சு. சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.” என்று கூறியுள்ளார்.

“சாதி ஆணவக் கொலையை குடி பெருமைக் கொலை என்பேன்” என்று சீமான் கூறியது குறித்து பத்திரிகையாளர் பாரதி தம்பி விமர்சித்துள்ளார். பாரதி தம்பி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கடைசியில் சாதி ஆணவக் கொலைக்கு தமிழ்ப்பெயர் சூட்டுவதில் வந்து நிற்கிறார் சீமான். அது ‘சாதி ஆணவக் கொலை’ இல்லையாம். ‘குடி பெருமை கொலை’யாம். உன் பெருமையில தீயை வைக்க… பேசாம, நாம் தமிழர் சார்பில் குடி பெருமை கொலை அணி ஏற்படுத்திருங்க… காசு பணத்துக்கு கஷ்டம் இல்லாம சௌரியமா இருக்கலாம். அண்ணன் சுருக்கமா என்ன சொல்றார்னா, ஆணவக் கொலை செய்தாலும் அதை தமிழ் முறைப்படி செய்யனும். அதுதான் தமிழ்க்குடிகளுக்கு பெருமை என்கிறார்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/seeman-has-stirred-up-controversy-he-called-caste-killing-as-kdui-perumai-kolai-384226/