இந்து ஏட்டுக்கு என்ன நேர்ந்தது?
இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்னபெயர்? என்ற தலைப்பில் இந்து ஏடு ஒரு நீண்ட கட்டுரையை 4-2-2016 தேதியிட்ட இதழில் வெளியிட்டுள்ளது. சமஸ் என்பவர் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கும் அறிவுடைய மக்கள் இந்து ஏட்டுக்கு என்ன நேர்ந்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்னபெயர்? என்ற தலைப்பில் இந்து ஏடு ஒரு நீண்ட கட்டுரையை 4-2-2016 தேதியிட்ட இதழில் வெளியிட்டுள்ளது. சமஸ் என்பவர் எழுதிய இக்கட்டுரையை வாசிக்கும் அறிவுடைய மக்கள் இந்து ஏட்டுக்கு என்ன நேர்ந்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அந்த அளவுக்கு பொய்களும் முரண்பாடுகளும் கற்பனைகளும் கொண்ட அபத்தக் களஞ்சியமாக அக்கட்டுரை அமைந்துள்ளது.
அபத்தம் 1
அல்லாஹ்வை ஒருவனைத் தவிர யாரையும் எதையும் வணங்கக் கூடாது என்று கூறி மற்ற கொள்கைகளை வஹ்ஹாபிகள் மறுக்கிறார்கள் என்ற கட்டுரையின் சாரமே அர்த்தமற்றதாக உள்ளது.
அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்பது எப்படி ஒரு கொள்கையாக உள்ளதோ அது போல் எதையும் வணங்கலாம் என்பது இதற்கு எதிரான மற்றொரு கொள்கை.
கட்டுரையாளர் இந்த எதிர் கொள்கையில் தான் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை விதைக்கிறார்.
அதாவது ஒற்றைக் கொள்கை கூடாது எல்லாக் கொள்கைகளுக்கும் இடம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு எதையும் வணங்கலாம் என்ற ஒற்றைச் சிந்தனைக்கு வக்காலத்து வாங்கி தனக்குத்தானே முரண்படுகிறார்.
இது பற்றி அவர் எதையும் எழுதாமல் இருந்தால் தான் இந்த வாதம் செய்ய அவருக்கு அருகதை இருக்க முடியும். இரு முரண்பட்ட கொள்கையில் தனக்கு விருப்பமான ஒரு கொள்கை தான் நல்லது என்று கூறி இந்து ஏட்டின் தரத்தை பாதாளத்தில் தள்ளுகிறார்
அபத்தம் 2
திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்புமாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம்கேட்டேன், “ஷிர்க் என்றால்என்ன?” “மூடநம்பிக்கைதோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத்தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்றபெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும்என்று நினைக்கிறீர்கள். அதுஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லைதோழர். ஒரே இறைவன், ஒரேவழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள்அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கைவைக்கிறீர்கள். நாளைக்குஅரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கைவைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன்கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம்வைக்கும்?” அவர் என்னைஒரு மாதிரியாகப் பார்த்தார்.
என்று கட்டுரையாளர் வாதம் வைக்கிறார். தவ்ஹீத் ஜமாஅத் நாட்டில் உள்ள தர்காக்களை எல்லாம் இடித்துத் தள்ளிவிட்டது போலவும் அடுத்து அதிகாரம் கிடைக்கும் போது கோவில்கள் சர்ச்சுகள் எல்லாம் இடிக்கப்படும் எனவும் நஞ்சை விதைக்கிறார். தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையை அதன் நிர்வாகிகளின் பேச்சு மற்றும் எழுத்திலிருந்து புரிந்து கொள்ளாமல் தவ்ஹீத் ஜமாஅத்தின் புரசைவாக்கம் எதிரிகளிடம் கேட்டு அப்படியே வாந்தி எடுத்துள்ளார்.
இஸ்லாமிய நம்பிக்கைப்படி தர்கா கட்டக்கூடாது; நபிகள் நாயகம் அவர்கள் அதற்குத் தடை போட்டுள்ளார்கள். இதை அறியாமல் தர்காக்களை கட்டியவர்களும் அதன் உரிமையாளர்களும் இதனை தவறு என்று உணர்ந்து அவர்களே அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று தான் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது. எந்த ஊரிலும் தர்காவை தவ்ஹீத் ஜமாஅத் இடிக்கவில்லை. இடிக்கப்பட வேண்டும் என்று நபிகள் சொன்னதை நீங்கள் வணங்கலாமா என்று கொள்கைப் பிரச்சாரத்தை தான் முடுக்கி விட்டிருக்கிறது.
அபத்தம் 3
காந்தி சொன்னார், “நான் ஒருஇந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம்என எந்த வடிவில் வந்தாலும்மத அடிப்படைவாதம்எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாதஎதிர்ப்புக்கான இலக்கணம் இல்லையா?
இது கட்டுரையாளரின் கேள்வி.
இதில் கடுகளவாவது லாஜிக் உண்டா? அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான லாயிலாஹ இல்லல்லாஹு என்பதன் பொருள். இதை ஏற்றால் தான் ஒருவர் முஸ்லிம். அப்படி அனைத்து தெய்வங்களையும் மறுத்து விட்டு முஸ்லிமாக இருக்கும் போது இன்னொரு மதத்தவராக எப்படி இருக்க முடியும்? இருப்பதாகச் சொன்னால் அவர் பொய் சொல்கிறார்.
ஒருவர் திமுகவாக இருக்கும் போதே அவர் அதிமுகவாகவும் இருக்கிறார். காங்கிரசாகவும் இருக்கிறார். பீஜேபியாகவும் இருக்கிறார் என்று கூறுவது எவ்வளவு மடமையோ அதைவிட மடமையாக இந்த வாதம் அமைந்துள்ளது.
இந்துவாக இருப்பவர் இந்துவாக மட்டும் இருந்து கொண்டு மற்ற மதத்தவருக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். முஸ்லிமாக இருப்பவர் முஸ்லிமாக இருந்து கொண்டு மற்ற மதத்தவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். இதுதான் நல்லிணக்கத்துக்குத் தேவை.
நான் திமுக தான் ; அதிமுக தான்; காங்கிரஸ்தான், கம்யூனிஸ்டுதான் பீஜேபிதான் என்று கூறுவது ஏமாற்ற உதவுமேயன்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.
இந்த அடிப்படை அறிவு கூட கட்டுரையாளருக்கு இல்லை.
அபத்தம் 4
சென்னை வெள்ள நாட்களில்‘தி இந்து’வில் வெளியான ஒருபடம் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நண்பரும்பத்திரிகையாளருமானமுஹம்மது அமீன், “காஷ்மீர்வரை இந்தப் படம்போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்!” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக் கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள்சுத்தப்படுத்திய படம் தான் காஷ்மீரிலும் டெல்லியிலும்அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனையமுஸ்லிம் சமூகங்களுக்குத்தமிழக முஸ்லிம்கள்தான் மதநல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாகஇருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூடவழிகாட்ட முடியும். அதற்கானகலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது!”
என்று அடுத்த அபத்தத்தை எடுத்து வைக்கிறார்.
வெள்ளத்தால் மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த போது அவர்களை மீட்பதும் தேவையான உதவிகள் செய்வதும் தான் முக்கியம். அதை தவ்ஹீத் ஜமாஅத் தான் முன்னணியில் நின்று செயல்படுத்தியது. அந்த நேரத்தில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி பணியாற்றாமல் விளம்பரத்துக்காக கோவிலைச் சிலர் சுத்தம் செய்தனர். அந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலை இதுவா? அங்குள்ள மக்கள் தமது கோவிலைச் சுத்தம் செய்து கொள்ள மாட்டார்களா?
ரோம் தீப்பற்றி எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் கருத வேண்டிய ஒரு செயலை மகத்தான நல்லிணக்கமாக கட்டுரையாளர் சித்தரிக்கிறார்.
தவ்ஹீத் ஜமாஅத் செய்ததில் ஒரு சதவிகிதம் கூட நிவாரணப்பணி செய்யாத தர்கா வழிபாட்டுக்காரர்களை நல்லிணக்க நாயகர்கள் என்கிறார்.
அபத்தம் 5
அடுத்து வஹ்ஹாபிச அச்சுறுத்தல் என்கிறார்.
தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் வஹாபிசத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சவூதி உள்ளிட்ட எந்த வெளிநாட்டில் இருந்தும் எந்த உதவியும் பெறக் கூடாது என்று விதியை ஏற்படுத்தியுள்ள ஜமாஅத் தவ்ஹீத் ஜமாஅத்.
வஹ்ஹாபிகள் என்று இந்து ஏடு குறிப்பிடும் சவூதியின் பல கொள்கைகளை தவ்ஹீத் ஜமாஅத் எதிர்க்கிறது. எவனெல்லாம் தர்கா கூடாது என்கிறானோ அவனெல்லாம் வஹ்ஹாபி என்ற அளவுக்குத் தான் இவரது ஞானம் உள்ளது.
வஹ்ஹாபிகளாக இல்லாத ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத், உள்ளிட்ட பல இயக்கங்கள் வஹ்ஹாபிகளாக இல்லாமல் தர்கா வழிபாட்டை எதிர்ப்பவர்கள் தான்.
தர்கா வழிபாட்டை எதிர்ப்பது நபிகள் நாயகம் எதிர்த்தார்கள் என்பதற்காகவே தவிர முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் எதிர்த்தார் என்பதற்காக அல்ல.
அடுத்து வஹ்ஹாபிகள் மற்ற கொள்கை உடையவர்களை அழித்தொழிப்பார்கள் என்று கட்டுரையாளர் சித்தரிப்பதும் அறியாமையின் வெளிப்பாடு தான்.
சவூதியில் ஷியாக்கள் உள்ளனர். அவர்களுக்கு பள்ளிவாசல்கள் இன்றும் உள்ளன. அதை சவூதி அரசு அழித்து ஒழிக்கவில்லை. சவூதியைச் சேராத வெளிநாட்டில் இருந்து பிழைக்க வந்தவர்கள் இந்துக்களானாலும் முஸ்லிம்களானாலும் அவர்கள் வழிபாட்டுத் தளம் அமைக்க அனுமதி இல்லை. சவூதி குடிமகனாக இல்லாத தவ்ஹீத் ஜமாஅத்தினர் சவூதியில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதி கேட்டால் அனுமதிக்கப்படாது. ஏன் வெளிநாட்டவர்கள் சொந்தமாக தொழில் துவங்குவது கூட அங்கே எளிதான காரியமல்ல. இந்த அடிப்படை விளங்காமல் கட்டுரையாளர் நுனிப்புல் மேய்ந்துள்ளார்.
சமஸ் ஆதரிக்கும் சமாதி வழிபாட்டுக்காரர்களான ஈரான் ஷியா பிரிவினர் ஈரானில் வஹ்ஹாபிசத்தை, தப்லீக் ஜமாஅத்தை அனுமதிப்பதில்லை என்பது கட்டுரையாளருக்குத் தெரியவில்லை.
தொன்மையான கலைப்படைப்புக்களை அழித்தார்கள் என்று சொல்லும் சமஸ் ஈரானில் தகர்க்கப்பட்ட பள்ளிவாசல்கள் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?
ஒசாமாவும் முல்லா உமரும் சவூதியின் வஹ்ஹாபிசத்தை எதிர்ப்பவர்கள் என்பது சமசுக்குத் தெரியாமல் போனது எப்படி?
மக்காவின் புனிதப் பள்ளிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்திய ஈரான் ஷியாக்கள் சமாதி வழிபாடு செய்வோர் என்பதைக் கட்டுரையாளர் கண்டு கொள்ளாத அது ஏன்?
சவூதியில் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதாக குறைபட்டுக் கொள்கிறார் கட்டுரையாளர்.
கட்டுப்பாடு தணிக்கை என்றெல்லாம் உளறுகிறார். இதுவெல்லாம் அரசின் நடவடிக்கையாகும். இதைவிட ஆயிரம் மடங்கு சீனாவில் கட்டுப்பாடு உள்ளது. முஸ்லிம்கள் நோன்பு வைக்கத் தடை! தாடி வைக்கத் தடை! இன்னும் பல தடைகள் உலக நாடுகளில் இருப்பது கூட இவருக்குத் தெரியவில்லை.
கட்டுரையாளருக்கு அறிவு நாணயம் இருந்தால் சவூதியில் உடல் உறுப்புக்கள் வெட்டப்பட்ட மூன்றரை லட்சம் பேர் என்பதற்கும் நாற்பதாயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறியதற்கான ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும். நாம் எதை எழுதினாலும் எவன் கேள்வி கேட்கப் போகிறான் என்று வாயில் வந்ததை உளறக் கூடாது.
சிரியாவில் தர்கா வழிபாடு நடத்தும் அதிபர் பஷீரால் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஏமனில் ஈரானின் ஆயுத உதவி பெற்று ஷியா தீவிரவாதிகள் செய்த படுகொலைகள் எவ்வளவு? இதுவெல்லாம் தெரியாத ஒருவர் இது குறித்து கட்டுரை எழுதத் துணியலாமா?
தற்போது 47 பேர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள் என்று குறிப்பிடுகிறார். அதற்கான காரணம் கூட இவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் பொது இடங்களில் குண்டு வைத்தவர்கள் என்ற உண்மையை அப்படியே அமுக்கி விட்டார்.
அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் கூட தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் அல்ல.
இவர் சொல்வது போல் சவூதியின் கொள்கை அதுவாக இருந்தால் அதற்கும் தவ்ஹீத் ஜமாஅதுக்கும் என்ன சம்மந்தம்? அதற்கு என்ன ஆதாரம் என்று காட்ட வேண்டாமா?
அபத்தம் 6
வஹாபியிஸம் எந்த நாட்டில்நுழைந்தாலும் அதுபொதுவெளியில்முன்வைக்கும் இருமுழக்கங்கள் - ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். மூன்றாவதுமுழக்கம் அந்தரங்கமானது - ஒரே அரசு!
ஒரே கடவுள்; ஒரே கலாச்சாரம் என்பது இஸ்லாத்தின் கொள்கை தான். லாயிலாஹ இல்லல்லாஹு என்பதன் அர்த்தம் கூட இவருக்குத் தெரியவில்லை. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்பது இதன் பொருள். இது தான் இஸ்லாத்தின் கொள்கையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ள கொள்கையை வஹ்ஹாபிக் கொள்கை என்று சொல்லும் அளவுக்கு அறிவில்லாமல் எழுதுகிறார்.
மூன்றாவது முழக்கம் ஒரே அரசு என்கிறார். இதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும். இது முற்றிலும் கட்டுக்கதையாகும்.
அப்படி இருந்தாலும் எக்காலத்திலும் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று செயல்படும் தவ்ஹீத் ஜமாஅத் பற்றி இவர் இப்படி எழுதியதற்கு அதிக நெஞ்சழுத்தம் வேண்டும்.
அபத்தம் 7
இஸ்லாத்தில் அடிப்படையில்மதம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலானஒப்பந்தம். அது ஆன்மிகமயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப்பிரயோகத்துக்கோ இடமேஇல்லை. ஏனைய சமூகங்களுடனான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன்வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. வஹாபியிஸமோ, எதுஒன்றையும் குறுகிய மதக்கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.
என்று சாத்தான் வேதம் ஓதுவது போல் எழுதுகிறார்.
தவ்ஹீத் ஜமாஅத் எப்படி ஒரே இறைவன் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளதோ அதே அளவு உறுதியை பிற மதமக்களிடம் நல்லிணக்கம் பேணவும் கடைப்பிடிக்கிறது.
அதனால் தான் சமஸ் ஆதரிக்கும் சமாதி வழிபாட்டுக்காரர்கள் நிவாரணப் பணிகள் எதுவும் செய்யவில்லை. சமாதி வழிபாட்டை எதிர்ப்பவர்கள் மட்டுமே களத்தில் நின்றார்கள்.
அபத்தம் 8
காவிரிப் படுகையில் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் பூஜையறையில் மூன்று படங்களைப் பார்க்க முடியும். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் படம், வேளாங்கண்ணி மாதாதேவாலயப் படம், நாகூர் தர்கா படம். சமீபத்தில்உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு நாளில், நாடக ஆசிரியர் பென்னேஸ்வரன் விசாரித்தார். “வைத்தியம் ஒருபக்கம் நடக்கட்டும். மூணுஇடம் சொல்றேன். அவசியம் போய்ட்டு வாங்க. திருவொற்றியூர் பட்டினத்தார்சமாதி, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி, அண்ணா சாலை ஹஸ்ரத்சையத் மூசா ஷா தர்கா.” பென்னேஸ்வரன் ஒருபிராமணர். டெல்லியில் வசிப்பவர். இந்திய மக்களிடம் கருத்தாக்கம் வழியாக அல்ல; வாழ்வியலின் ஒரு பகுதியாக ஊடுருவியிருக்கிறது மதச்சார்பின்மை.
தமிழகத்தில் பல கோயில்கள்- மசூதிகளில் இந்துக்கள்முஸ்லிம்களுக்குத்திருநாட்களில் முதல்மரியாதை முறை உண்டு. பெரும்பாலான தர்காக்களில்சந்தனக்கூடு திருவீதியுலாநிகழ்வில் இந்துக்களும்பங்குதாரர்கள். தர்காக்கள்வழிபாட்டுக்குரியஇடங்களோ, இல்லையோ; வெவ்வேறு சமூகங்களைஇயல்பாக ஒன்று சேர்க்கும்இடங்கள். அந்த வகையில், தர்காக்கள் மீதான தாக்குதல்மதச்சார்பின்மை மீதானதாக்குதல்; சகிப்புத்தன்மைமீதான தாக்குதல்.
இதுதான் இவரது விஷமத்தின் உச்ச கட்டம். முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் கொள்கையை விட்டு விட்டு பல தெய்வ வணக்கம் செய்ய வேண்டுமாம். கோவிலுக்குப் போய் கும்பிடவேண்டுமாம்.
முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ் கொள்கையைப் புகுத்துகிறார்.
சாதாரண அடிப்படை அறிவு கூட இவருக்கு இல்லை என்பதற்கு இந்த வாதமே போதும்.
உலகில் பல மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தின் கொள்கைக்கு முரணாக இன்னொரு மதத்தின் கொள்கைகள் உள்ளன. கொள்கையில் மட்டுமின்றி சட்ட திட்டங்களிலும் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு முரண்பாடுகள் இருப்பதால் தான் இத்தனை மதங்கள் காணப்படுகின்றன. முரண்பாடுகள் இல்லாவிட்டால் ஒரே ஒரு மதம் தான் உலகில் இருக்கும். இந்த அடிப்படையை இவர் புரிந்து கொள்ளவில்லை.
மதங்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதை நாம் மறுக்க முடியாத போது முரண்பட்ட இரண்டும் எனக்குச் சம்மதமே என்று கூறுவது பொருளற்றது என்பதையும் இவர் விளங்கிக் கொள்ளவில்லை.
கடவுள் ஒரே ஒருவன் தான் என்பது ஒரு மதத்தின் கொள்கை.
பல்வேறு பணிகளைச் செய்வதற்குப் பல்வேறு கடவுளர்கள் உள்ளனர் என்பது இன்னொரு மதத்தின் கொள்கை.
இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒரு கொள்கையைத் தான் ஒருவர் நம்ப முடியும். முதல் கொள்கையை நம்பும் போது இரண்டாவது கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டாவது கொள்கையை நம்பும் போது முதல் கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இரண்டும் எனக்குச் சம்மதம் தான் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
கடவுளுக்கு மனைவியர் உண்டு. மக்கள் உண்டு. கடவுளுக்குத் தூக்கம் உண்டு, கடவுளுக்கு அறியாமை உண்டு என்று ஒரு மதம் கூறுகிறது.
இவற்றில் எதுவுமே கடவுளுக்கு இருக்கக் கூடாது. இவை கடவுள் தன்மைக்கு எதிரான பலவீனங்கள் என இன்னொரு மதம் கூறுகிறது.
முரண்பட்ட இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் ஒருவர் நம்ப முடியுமே தவிர இரண்டையும் நம்ப முடியாது.
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே புரோகிதர் வேண்டும் என்று ஒரு மதம் கூறுவதை நம்பினால் புரோகிதர் கூடாது என்று இன்னொரு மதம் கூறுவதை நம்ப முடியாது.
இந்துவாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உண்மையாகவே நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் நம்பவில்லை. நம்ப முடியாது; நம்பக் கூடாது என்பது தான் பொருள்.
முஸ்லிமாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பவில்லை, நம்ப முடியாது நம்பக் கூடாது என்பது அதன் பொருள்.
மதங்கள் மனிதனிடமிருந்து எளிதில் பிரிக்க முடியாத படி ஆழமாக வேரூன்றியுள்ளன. கட்சிகள், சங்கங்கள். இயங்கங்கள் போன்றவை அந்த அளவுக்கு மனிதனிடம் வேரூன்றவில்லை.
மதங்களை விட குறைவாகவே மனிதர்களை ஈர்க்கும் வகையில் கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.
கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிப்பவர் அதே நேரத்தில் காங்கிரசிலோ, திமுக, அதிமுக கட்சிகளிலோ அங்கம் வகிக்க முடியாது. எல்லாக் கொள்கைகளும் எனக்குச் சம்மதமே என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அவர் எந்தக் கொள்கையுமில்லாத சந்தர்ப்பவாதியாகவே கருதப்படுவார்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிப்பவர் புதிய தமிழகத்தில் அங்கம் வகிக்க முடியாது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் கவனிக்கப்படும் கட்சிகளின் நிலையே இதுவென்றால் மனிதனது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பினணந்திருக்கும் மதங்களில் முரண்பட்ட இரண்டை எப்படி ஒரு நேரத்தில் நம்ப முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உளப்பூர்வமாக இல்லாமல் வாயளவில் மட்டுமே பேசப்படும் சித்தாந்தமாக எம்மதமும் சம்மதம் சித்தாந்தம் அமைந்திருப்பதால் இந்தச் சித்தாந்தத்தினால் எந்த நன்மையும் விளையவில்லை. இந்தப் போலிச் சித்தாந்தம் மதங்களிடையே நல்லிணக்கத்தை எற்படுத்த முடியவில்லை.
இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியைச் சொல்கிறது. போலித்தனமில்லாத வழியைக் கூறுகிறது.
”எனக்கு என் மார்க்கம் தான் பெரிது. உன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிட மாட்டேன்” என்பது இஸ்லாத்தின் நிலை
”உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (109:6)
அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின் படி நடப்பதைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது என்ற இந்தக் கோட்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. போலித்தனமும் இல்லை. நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும்.
இந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் போது மத நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்து மதத்தில் சைவ உணவு உட்கொள்ளக் கூடிய பிரிவைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிமுக்கு நண்பராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். முஸ்லிம் நண்பர் தனது பெருநாள் பண்டிகையைக் கொண்டாடும் போது மாமிச உணவைச் சமைத்து வைத்து நண்பரை அழைத்தால் அவர் அவ்விருந்தை உண்ண மாட்டார். இந்து நண்பர் எதை விரும்ப மாட்டாரோ அந்த உணவை இந்து நண்பருக்குக் கொடுக்காமல் அவர் விரும்புகிற உணவை வழங்குவது தான் அவரையும் அவரது மதத்தையும் மதிப்பதாக ஆகும்.
இந்து நண்பர் முஸ்லிம் நண்பரின் அசைவ உணவை மறுப்பதால் அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணக் கூடாது.
வழிபாட்டு முறையிலும் இது போன்ற பரந்த மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாட்டில் வேறுபாடுகள் உள்ளன. அவரவர் தத்தம் மதத்தின்படி வழிபாடு நடத்திக் கொள்வதை மற்றவர்கள் அங்கீகரிப்பது தான் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். ஒருவரது வழிபாட்டை மற்றவர் மீது திணித்தால் நல்லிணக்கத்திற்கு பதிலாக துவேஷம் தான் வளரும்.
ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கை. இந்தக் கொள்கையில் உறுதியுடன் முஸ்லிம்கள் இருந்தால் அதைக் குறை கூறுவது நியாயமாகாது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர் கருணாநிதியின் படத்தை வீட்டில் மாட்டியிருப்பார். அவரது அண்ணா தி.மு.க நண்பர் ஜெயலலிதாவின் படத்தையும் மாட்டுமாறு கூறினால் அவர் ஏற்க மாட்டார். இவ்வாறு கூறுவது சரி தான் என்று யாரும் ஏற்க மாட்டோம். அநாகரீகம் என்போம்.
கடவுள் நம்பிக்கை இதை விட வலிமையானதாகும். எனவே ஒருவரது கடவுளை மற்றவரும் ஏற்க வேண்டும் என்று கருதுவது ஏற்க முடியாததாகும்.
இந்துக்களின் வழிபாட்டு முறையில் முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் வழிபாட்டு முறையில் இந்துக்களோ குறுக்கிடாமல் இருப்பதும், தமது நம்பிக்கையை மற்றவர்கள் மீது கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் தான் மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.
அபத்தம் 9
இந்துத்துவ அமைப்புகள் பலநீண்ட காலமாக இந்துக்கள் மத்தியில் தர்கா வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றன. இன்றைக்கு இஸ்லாமியத்துவ அமைப்புகளும் முஸ்லிம்களிடம் அதேகாரியத்தில் இறங்கியிருக்கின்றன என்றால், நமக்கு உணர்த்தப்படும் செய்திஎன்ன?
என்று கூறி தன்னுடைய அறியாமையை மீண்டும் நிரூபிக்கிறார். இந்துக்கள் தர்கா வழிபாட்டை எதிர்க்கவில்லை. தர்காவுக்கு அதிகமாக போகின்றவர்கள் இந்துக்கள் தான். இதுதான் இந்து மதக் கொள்கைக்கு நெருக்கமாக உள்ளதால் தர்காவை இந்துக்கள் எதிர்த்ததில்லை. இதுவும் கட்டுரையாளருக்குத் தெரியவில்லை
அபத்தம் 10
பிளவுகள் குடும்பத்தில்தொடங்குகின்றன
தவ்ஹீத் ஜமாஅத் கொள்கை காரணமாக குடும்பத்தில் பிளவுகள் ஏற்படுகின்றன என்று பாமரத்தனமாக வாதம் வைக்கிறார்.
வரதட்சனை வாங்காதே என்று மகன் கூறுகிறான். பெற்றோர் வாங்கச் சொல்கிறார்கள். குடும்பத்தில் பிளவு ஏற்படக் கூடாது என்பதற்காக வரதட்சனை வாங்க வேண்டும் என்கிறாரா?
மகன் திருடுகிறான். மோசடி செய்கிறான். இதைக் கண்டு தந்தை வேண்டாம் என்கிறார். இதனால் குடும்பத்தில் சண்டை. எனவே மகனை அவன் போக்கில் விட்டு விட வேண்டும் என்கிறாரா?
மருமகள் சரி இல்லை என்று விவாகரத்து செய்ய தாயார் சொல்கிறார். இதைக் கேட்காவிட்டால் குடும்ப உறவு முறிந்து விடும். எனவே மனைவியை உடனே விவாகரத்து செய்து விட வேண்டும் என்கிறார் போலும்
உலகில் எந்த சீர்திருத்தவாதியாக இருந்தாலும் அவரது கருத்தை ஏற்பவர்கள் எதிர்ப்பவர்கள் என்று இரு அணிகளாக மக்கள் பிரிவார்கள். ஆனால் இவரது வாதப்படி சாக்ரடீஸ் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள் செய்தது தவறாகிவிடும். உலகில் எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பத்ற்கு நிகரான அயோக்கியததனம் எதுவும் இருக்க முடியாது.
அபத்தம் 11
அடுத்து ஆதம் தீன் என்பவர் எழுதியதாக ஒரு கதையை எழுதுகிறார். இக்கதை இவருக்கே எதிராக உள்ளது. பெற்றொருக்கு எதிராக ஆதம் தீன் மாறினார் என்று அதை பாராட்டுகிறார். அதற்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும்ம் என்ன சம்மந்தம்? பக்கத்தை நிரப்ப எழுதிய கதையாகவே இது அமைந்துள்ளது.
அபத்தம் 12
புனிதம் எனும் கொடுஞ்சொல்!
உலகிலேயே முதல் முறையாகஐஎஸ் அமைப்புக்கு எதிராக1,050 இஸ்லாமிய அறிஞர்கள்கூட்டாக ஃபத்வா பிறப்பித்துஐநா சபை பொதுச்செயலாளருக்கு அனுப்பிய முன்னுதாரணம், இந்தியமுஸ்லிம் சமூகத்திடமிருந்துவெளிப்பட்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு. வஹாபியிஸத்தின் வயது அதிகபட்சம் மூன்று நூற்றாண்டுகள். இந்திய இஸ்லாம் குறைந்தபட்சம்வஹாபியிஸத்தைக் காட்டிலும் ஆயிரம் ஆண்டுகள் மூத்தது, பழமையானது. நம்மைப்பார்த்துதான் சர்வதேசமுஸ்லிம் சமூகம் நெகிழ்வான பன்மைத்துவத்தைக் கற்கவேண்டும்.
இதிலும் முரண்பாடுகள். தீவிரவாதத்துக்கு எதிராக பத்வா கொடுத்த அறிஞர்கள் என்று இவர் குறிப்பிட்டுள்ளாரே இதுவே அவரது ஒட்டு மொத்த கட்டுரையின் கருத்தையும் குப்பைக் கூடைக்கு அனுப்பி விடுகிறது.
ஆம் இந்த அறிஞர்களில் அதிமகானவர்கள் சவூதியைச் சேர்ந்த வஹ்ஹாபி அறிஞர்கள் தான். இதில் இருந்து வஹ்ஹாபிகள் குறித்து இவர் வாதிட்ட அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.
அபத்தம் 13
இயற்கையின் அடிப்படை பன்மைத்துவம். வரலாற்றில் மனிதத்துக்கு எதிரான மிகக்கொடிய வன்முறைகள்அனைத்தும் புனிதம் எனும் தூய்மைவாத சொல்லின் பெயராலேயே நடந்திருக்கின்றன. இந்துமதத்தின் தூய்மைவாதப் புனிதம் தான் தம்முடையசொந்த சகோதரர்கள் கோடிக்கணக்கானோர் மீது கொடுமையான பாகுபாட்டையும் உச்சபட்சமாகத் தீண்டாமையையும் திணித்தது.
இதிலும் அவரது அறிவுத் திறன் ? பளிச்சிடுகிறது.
இரு கம்யூனிஸ்டுகள் அடித்துக் கொண்டது புனிதம் என்பதாலா? அமெரிக்க்கா அரபு நாடுகளில் நுழைந்து கொள்ளை அடிப்பது புனிதம் என்பதற்காகவா?
ஒரே மொழி பேசக் கூடியவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரே ஊரைச் சேர்ந்தவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரே குடும்பத்தவரிடையேயும் சண்டைகள் நடக்கின்றன. ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு சகோதரர்களுக்கிடையே சண்டைகள் நடக்கின்றன.
ஒரு மொழி பேசக்கூடிய மக்களிடையே சண்டைகள் நடக்க அம்மொழி எப்படி காரணமாக இல்லையோ, ஒரு மாநிலத்தவரிடையே எற்படும் சண்டைகளுக்கு அம்மாநிலம் எப்படிக் காரணமாக இல்லையோ, ஒரு குடும்பத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அக்குடும்பம் எப்படிக் காரணமாக இல்லையோ அது போல் தான் ஒரு மதத்தவரிடையே நடக்கும் சண்டைகளுக்கும் அம்மதம் காரணம் இல்லை.
இரத்தம் சிந்த பல காரணங்கள் உள்ளன. ஒரு விஷயத்தைப் புனிதமாக கருதும் மக்களிடையே கூட இரத்தம் சிந்தும் நிலை உள்ளது. அதை அறியாமல் நுணிப்புல் மேய்ந்துள்ளார்.
அபத்தம் 14
அன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்து கொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத்தெரியாது, தம் போதனைகள்எத்தனை நூற்றாண்டுகளுக்குசக சகோதரர்களை இழிவானசேரிகளில் புறக்கணிப்பிலும்அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்துநசுக்கும் என்பது. ஒற்றைக்கலாச்சார புதிய மசூதிகளில் இன்றைக்குப் தூய்மைவாதப் புனிதத்தைப் போதிப்பவர்களும் அதற்கு இணையான பெரும் தவறை இழைக்கிறார்கள். கோயில்களின் ‘புனிதபோதனை’ வரலாற்றுக்கொடுமை என்றால், ஒற்றைக்கலாச்சார புதிய மசூதிகளின்‘புனித போதனை’ வரலாற்றுத் துரோகம். வெறுமை உணர்ச்சியிலும் கொந்தளிப்புச் சூழலிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒருசமூகம் அத்தனை சீக்கிரம் எழமுடியாத வெறுப்புப் பள்ளத்தில்தள்ளப்படும். பெரும்பான்மை அடிப்படைவாதம் இந்தத் தருணத்துக்காகத்தான் வெறியோடு காத்திருக்கிறது.
இங்கு தான் மேற்படியான் தான் ஒரு சங்பரிவார ஏஜண்ட் என்று காட்டிவிடுகிறார்.
தலித் மக்களை ஒடுக்கியவர்களுக்கு அதன் விளைவு தெரியாதாம். அது போல் ஒரு கடவுள் கொள்கையின் விபரீதம் பிறகு தெரியவருமாம்.
பார்ப்பணர்கள் என்ன விளைவு ஏற்படும் என்று அறிந்துதான் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார்கள். வன்முறை மூலம் மனுதர்மத்தை நிலை நாட்டி கொடுமைப்படுத்தினார்கள். இப்போது என்ன விளைவை நாம் காண்கிறோமோ அதைவிட அதிகமான விளைவுகள் அன்றே ஏற்பட்டன. அவ்வாறு ஏற்படுவதற்காகத் தான் அவர்களும் புனிதக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அறிவுப்பூர்வமாக வாதங்களை வைத்து இதுதான் சரி என்று வாதிடுகிறது.
இக்கொள்கையைச் சொன்னதற்காக தர்கா வழிபாடு செய்வோரின் வன்முறைகளுக்கு கூட அதே வழியில் பதிலடி கொடுக்கவில்லை. அவர்களை அறிவால் வென்றெடுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலையும் பார்ப்பனர்க்ளின் மனுதர்மத்தையும் சமமாக ஆக்கும் அளவுக்கு சிந்தனையை இழந்து நிற்கிறார்,
அபத்தம் 15
இந்தியாவில் சிறுபான்மைஅடிப்படைவாதிகள் தங்களைஅறியாமல் செய்யும் மாபெரும்பிழை பெரும்பான்மைஅடிப்படைவாதிகளுக்கானநியாயத்தை உருவாக்குவது. தம் சொந்த மக்களுக்கு இதைவிடவும் ஒருகொடுமையை அவர்கள்இழைக்க வேண்டியதில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்குஇணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றையதார்மிகக் கடமை!
பூனைக் குட்டி வெளியே வந்து விட்டதா? வஹ்ஹாபிசத்தை எதிர்த்து அதற்கு எதிரான கொள்கை மட்டும் தான் நிலை நிற்க வேண்டுமாம். அந்த ஒற்றைக் கொள்கை தான் அவசியமாம்/
சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
ஒருபக்கம் வஹ்ஹாபிசம் மற்ற கொள்கைகளை சகிக்காது என்கிறார். மறுபக்கம் வஹ்ஹாபிசத்தை நாம் சகிக்க கூடாது என்கிறார்.
இந்து ஏட்டை இந்த நபரை விட யாரும் பாதாளத்தில் தள்ள முடியாது.