சனி, 16 டிசம்பர், 2017

போக்குவரத்துத் தொழிலாளர்களின் திடீர் ரகளையால் சென்னையில் பரபரப்பு! December 15, 2017

Image


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களின் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர்களில் ஒருபிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

13வது ஊதிய ஒப்பந்தம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இருதினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  

சென்னை பல்லவன் இல்லத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கத்தினர் காலை முதல் ஆலோசனை நடத்தினர். தொழிலாளர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கு காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். 

கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் மேற்கொள்ளபடும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். 

போராட்டம் வாபஸ் தொடர்பான தொழிற்சங்க நிர்வாகிகளின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் திடீரென போராட்டத்தில் இறங்கினர். நாற்காலிகளை உடைத்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். 

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்திலேயே போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கபபட்டது. பேருந்துகள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகள் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டனர். ஒரு சில பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

சென்னையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், கடலூர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள், போக்குவரத்து பணிமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.