
சென்னையில் சினிமா பாணியில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி டேனி என்பவர் நேற்று இரவு சென்னை பூந்தமல்லியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இதையடுத்து சென்னையில் உள்ள 100-க்கு மேற்பட்ட ரவுடிகள் ஒன்று சேர்ந்து பூந்தமல்லி அருகே லாரி ஷெட்டரில் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதனை ரகசியமாக அறிந்த காவல்துறை அதிகாரிகள் ராவுடிகள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
போலீசாரின் ரகசிய திட்டத்தின் படி ரவுடிகள் கூடியிருந்த ஷெட்டர் போலீசார் சுற்றி வளைத்தனர். இதை அறிந்து ரவுடிகள் சிலர் அங்கிருந்து தப்பியோடினர். எனினும் 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் சினிமா பாணியில் ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட ரவுடிகளிடம் இருந்து அபாயகரமான கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.