கோவில்பட்டி: விவசாயிகளுக்கு 2014-15 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தென் தமிழகத்தில் மானாவாரி விவசாயம் செய்பவர்கள் அதிகம் உள்ளனர். நீரோட்டம் இல்லாததால் அவர்கள் மழையை நம்பியே விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் மழை இல்லாததால் இவர்கள் செலுத்திய பயிர் காப்பீட்டுத்தொகை இல்லாததால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் இந்த பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கிட கோரி கடந்த 6 மாதங்களாக தமிழ் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மாவட்டம் நிர்வாகம் தலையிட்டு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் உறுதி அளித்தபடி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று கோவில்பட்டியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொகுதி அமைச்சர் கடம்பூர் ராஜு வீட்டை கருப்பு கொடி ஏந்தி முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.