
சென்னையில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா இல்லத்தில் வருமானவரி புலனாய்வுத் துறை அதிகாரி எனக் கூறி சோதனை நடத்த முயன்றவர், போலீசாரைக் கண்டு தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டிற்கு வந்த மித்தேஷ் குமார் என்ற நபர், தான் வருமானவரித் துறை அதிகாரி எனக் கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார். வீட்டில் தீபாவின் கணவர் மாதவன் மட்டும் இருந்த நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள புகார் தொடர்பாக விசாரிக்க வந்ததாக அந்த நபர் கூறியுள்ளார்.
இதனிடையே, அவரின் நடவடிக்கைகளை கண்டு சந்தேகமடைந்த தீபாவின் ஆதரவாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மித்தேஷ் குமார் என்ற அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து போலீசாரின் கண் எதிரே அந்த நபர் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடினார். அவரை போலீசார் விரட்டிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபாவின் கணவர் மாதவன், காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள புகார் தொடர்பாக விசாரிக்க வந்ததாக கூறிய அந்த மர்ம நபர், வருமான வரித்துறை கடிதம் ஒன்றை காண்பித்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் அந்த நபர் எந்த சந்தேகமும் இல்லாத அளவுக்கு நடந்துகொண்டதாகவும் மாதவன் கூறியுள்ளார். இதனிடையே அந்த நபரை தேடும் பணிகளை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெ.தீபா வீட்டிற்கு சென்ற மர்ம நபர் வருமான வரித்துறை அதிகாரி இல்லை என்று வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது.