
நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
குஜராத் மாநிலம் ஷோரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில், அப்போது மாநில அமைச்சராக இருந்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா விசாரித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு, நாக்பூரில் ஒரு நீதிபதியின் இல்லத் திருமணத்திற்கு சென்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, குஜராத் என்கவுன்ட்டர் வழக்கு விசாரணைக்கு வேறு நீதிபதி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது சகோதரி புகார் கூறியிருந்தார். மேலும், லோயாவின் சந்தேக மரணம் தொடர்பாக விசாரணை கோரி, மும்பை வழக்கறிஞர் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த்தை நேற்று சந்தித்தனர். அப்போது அவர், இது தொடர்பாக 115 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட மனுவையும் அளித்தனர்.