வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

காவிரியில் தமிழகத்திற்கான நீர் பங்கீட்டை குறைத்தது உச்சநீதிமன்றம் February 16, 2018

Image

காவிரி வழக்கில் தமிழகத்திற்கான நீரின் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதன்படி, காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சியும், கர்நாடகாவிற்கு 184.75 டி.எம்.சி தண்ணீரும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமித்தவராய் மற்றும் ஏ.எம்.கன்வீல்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

காலை சுமார் 10.30 மணியளவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காவிரி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினர். அப்போது, காவிரி நதியைக் உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, காவிரி நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதில் 14.75 டிஎம்சி நீரைக் குறைத்து 177.25 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்க உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது என்று கூறிய நீதிபதிகள், அதன்படி கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி காவிரிநீர் அளிக்க உத்தரவிடுவதாக கூறினர். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க பரிந்துரைந்த நீதிபதிகள், குடியரசு தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நதிநீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காவிரி வழக்கில் தமிழகத்திற்கான நீர் முறையாக பெற்றுத்தரப்படும் என்று மிகுந்த எதிர்ப்புடன் இருந்த தமிழக விவசாயிகளிடையே தீர்ப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.