வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

​காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு மீதான வழக்கு கடந்து வந்த பாதை..! February 16, 2018

Image

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி இறுதித்தீர்ப்பு வழங்கும் நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்த சில தகவல்கள்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 1807ம் ஆண்டுதான் முதன் முதலாக பிரச்சனை எழுந்தது. அந்த சம்பவத்தை தொடர்ந்து 1892ம் ஆண்டு காவிரி நீர் பகிர்வு குறித்து சென்னை - மைசூர் இடையே 50 ஆண்டுகால ஒப்பந்தம் போடப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர் அணை கட்ட மைசூர் அரசு  1910ம் ஆண்டு முடிவு செய்தது. சென்னையும், மைசூரும் அணை கட்டிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு 1924ம் ஆண்டு அனுமதி வழங்கியது.  கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகுமலை கர்நாடக மாநிலத்தின் பகுதியாக மாறியது. 
காவிரி ஆற்றின் குறுக்கே மேலும் 2 புதிய அணைகளை கட்ட 1960ம் ஆண்டு கர்நாடகா முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் காவிரி நதிநீர் பிரச்சனை அதிகரித்ததை தொடர்ந்து 1986ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதன் தொடர்ச்சியாக அப்போதைய பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு 1990ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைத்தது. பின்னர் 1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. 

அதில், தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கர்நாடகாவின் சாகுபடி பரப்பளவு 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் உயர்த்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் 1995ம் ஆண்டு 30 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க கர்நாடகா மறுத்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடியது. தமிழகத்திற்கு 11 டி.எம்.சி.தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா நிராகரித்தது.

கடந்த 1998ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு மீண்டும் காவிரி நதிநீர் பிரச்சனை தலைதூக்கியது. காவிரி நடுவர் மன்றம் 2007ம் ஆண்டில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில், கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி தண்ணீரும், தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கி தீர்ப்பளித்தது. இதை அரசிதழில் வெளியிடக் கோரி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தன.  

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி வழக்கில் எழுத்துப்பூர்வமான பதிலை 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் தனது பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது. கேரள அரசு 2016ம் ஆண்டு தனது பதில்களை தாக்கல் செய்தது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.