வியாழன், 1 மார்ச், 2018

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது! March 1, 2018

Image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய +2 பொதுத்தேர்வில் 9 லட்சம் மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். இன்று மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. 

இந்த தேர்வு மொத்தம் 2,794 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6,903 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 8,66,934 மாணவ-மாணவிகளும், 40,686 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 9,07,620 பேர் எழுதினர். மேலும் 103 சிறை கைதிகள், புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர்.

இந்த ஆண்டு கூடுதலாக 278 புதிய தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டு, 45,380 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 

தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் கைப்பேசி எடுத்துவர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேர்வின் போது காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளியில் தேர்வு எழுதும் மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகத்தை போக்கவும், மன அழுத்தத்தை நீக்கவும் ஹெல்ப்லைன் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அரசு பள்ளிகளில் அடுத்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.