
காங்கிரஸ் மற்றும் பாஜகவை தோற்கடிக்க 3ஆவது அணி தேவை என, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டிற்கு ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படுவதாகவும் சந்திரசேகரராவ், கருத்து தெரிவித்துள்ளார். மூன்றாவது அணியை உருவாக்குவது தொடர்பாக பல்வேறு மாநில தலைவர்கள் தன்னை தொடர்பு கொண்டு பேசிவருவதாகவும், ஆக்கப்பூர்வமான முடிவை எடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, ஜார்க்கன் முன்னாள் முதல்வர் ஹேமத் சோரன் உள்ளிட்டோர் தன்னிடம் பேசியதாகவும் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாகவும், இதனைத் தடுக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார். சிறந்த நிர்வாகத்தை அளிக்க பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தோல்வி அடைந்துள்ளதாகவும் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.