மேட்டுபாளையம் பகுதிகளில் நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் பறவைகள் நீர் நிலைகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோடைகாலம் தொடங்கியதும் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் பகுதிக்கு பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படும். இங்கு நீர்காக்கைகள், கொக்குகள், நாரைகள், அருவாமூக்கன், போன்ற உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி பல்வேறு அரிய வகை வெளிநாட்டு பறவையினங்களும் வருவதுண்டு.
கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாமல் பொய்த்து போனதால் பல்லாண்டுகளாக பறவைகளை ஈர்த்த பல்வேறு நீர்நிலைகள் தற்போது வறண்டு கிடக்கின்றன.
இதனால் தற்போதுவரை வறண்டு விடாமல் ஓரளவு நீருடன் காணப்படும் லிங்காபுரம் நீர்தேக்க பகுதி மற்றும் பெள்ளாதி குட்டை போன்ற பகுதிகளுக்கு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.