புதன், 14 மார்ச், 2018

​மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய ஒரு பிளாஷ்பேக்! March 14, 2018

Image

உலகின் தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் உடல் நலக்குறைவால் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 76.
  • 1942-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், தனது 76-ஆவது வயதில் இன்று மரணமடைந்துள்ளார். இரண்டு திருமணங்கள் செய்துகொண்ட ஹாக்கிங்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 
  • 1959-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியலில் பி.ஏ. பட்டமும், அதையடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியையும் தொடர்ந்தார். 
  • 1960-களில் ஸ்டீபன் ஹாக்கிங் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது motor neurone என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார், இதனால் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. 
  • ஒரு கட்டத்தில் பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்துவிட்ட நிலையில், ஈக்வலைஸர் என்ற கம்ப்யூட்டர் புரோகிராம் உதவியுடன் கன்னத் தசைகளின் அசைவுடன் கம்ப்யூட்டர் குரலில் பேசத் தொடங்கினார் ஹாக்கின்ஸ். 
  • சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அண்டம் தொடர்பான ஆராய்ச்சியில் பல மைல்கல் சாதனைகளை புரிந்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். 
  • டைம் மெஷின், பிளாக் ஹோல், ஏலியன், பிக்பேங் தியரி உள்ளிட்ட அண்டம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவரை உலகே திரும்பிப் பார்த்தது. 
  • இமேஜினரி டைம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இவர் எழுதிய A BRIEF HISTORY OF TIME என்ற புத்தகம் தமிழ் உள்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
  • THE UNIVERSE IN A NUT SHELL, MY BRIEF HISTORY உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள ஹாக்கிங்கின் கோட்பாடுகளை தழுவி பல ஹாலிவுட் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 
  • மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் அடையாளம் காணப்பட்டுவரும் கடவுள் துகள் எனப்படும் “ஹிக்ஸ் போஸான்” இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர  ஆற்றல் கொண்டது என கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்தார். 
  • மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய கால கட்டம் இது எனக் கூறிய ஹாக்கிங், பூமியில் மனித இனம் தொடர தன் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவேன் என கூறினார். 
ஸ்டீபன் ஹாக்கிங்கின் மூச்சு நின்றுபோனதால் தடைபட்டுப் போன அவரது ஆராய்ச்சிகளை அவரது கோட்பாடுகளின் அடிப்படையில் வருங்கால சந்ததியினர் தொடருவார்கள் என எதிர்பார்க்கலாம்.