வெள்ளி, 16 மார்ச், 2018

பா.ஜ.க அரசை கவிழ்க்க அழைப்பு விடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு March 16, 2018

Image

பா.ஜ.க.வுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்குமாறு, பா.ஜ.க. கூட்டணியில் அல்லாத கட்சிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததால், பாஜகவுடனான கூட்டணியை தெலுங்குதேசம் முறித்துக்கொண்டது. மத்திய அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக அறிவித்துள்ளன. 

ஒருங்கிணைந்து ஆந்திராவிலிருந்து, தெலங்கானா மாநிலம் பிரிந்ததை அடுத்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வந்தார். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசோ ஆந்திராவின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இதனால், பா.ஜ.க., தெலுங்கு தேசம் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. 

அதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜூ, சவுத்ரி ஆகியோர் தங்களது பதவிகளை  ராஜினாமா செய்தனர். இந்நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அந்த கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதேநேரத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக ஆந்திர கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பாஜ,கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து, மக்களவை செயலருக்கு தெலுங்கு தேசம் கட்சிகள் கடிதம் எழுதியுள்ளது. அதில், தங்களது கோரிக்கையை இன்றே பட்டியலிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்குமாறு, பா.ஜ.க. கூட்டணியில் அல்லாத கட்சிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். தெலுங்கு தேசத்தின் அதிரடி நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து நீங்கவும், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரள வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். இதேபான்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான எம்.ஐ.எம்.கட்சி போன்றவை நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

இதனிடையே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால், கூச்சல் குழப்பம் நிலவியது. அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இரு அவைகளும் 10வது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியினர் பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர்.