ஞாயிறு, 18 மார்ச், 2018

வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை! March 17, 2018

Image

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால் கடும் நடவடிக்கை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சியால் மரம்  செடிகள் கொடிகள் காய்ந்து சருகாகின. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட கம்பத்ராயன் வனத்திலும், கேர்மாளம் வனத்தில் தீப்பிடித்து 500 ஏக்கர்  பரப்பளவில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.  

மூங்கில் உராய்வு காரணமாக வனத்தில் தீப்பிடித்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது வனப்பகுதியில் தீயின் தாக்கம் தணிந்துள்ளது. இரு மாநில எல்லையில் தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் சத்தியமங்கலம் தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், வனச்சரகத்திற்னுட்பட்ட வனத்தில் வனப் பணியாளர்கள் தீ பற்றாமல் தடுக்க முகாமிட்டு வருகின்றனர்.

தமிழக பகுதியான தாளவாடி, கேர்மாளம், ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீ பரவாமல் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வனத்தில் ஏற்படும் காட்டுத்தீ குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் தமிழகம், கர்நாடகம் இடையே தேசிய நெடுச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்லும் நபர்களிடம் காடுகளுக்குள் புகைப்பிடித்தல், சமையல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் வனத்துறை எச்சரித்துள்ளனர்.