சனி, 3 மார்ச், 2018

சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! March 3, 2018

Image

திருமண வயதை எட்டாத மாணவருக்கு போலி சான்று மூலம் பதிவு திருமணம் செய்து வைத்த பூந்தமல்லி சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க, பதிவுத்துறை ஐ.ஜி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் மகாலட்சுமி. சென்னையை சேர்ந்த மைக்கேல் விக்னேஷ் என்பவரை பதிவுத் திருமணம் செய்துக் கொண்டார். இதனை அடுத்து, மைக்கேல் விக்னேஷிடம் சட்டவிரோத காவலில் தனது மகள் உள்ளதாகவும், அவரை மீட்டு தரக் கோரியும் கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண வயதை அடையாத மைக்கேல் விக்னேஷ், போலிச் சான்றிதழ்களை தயாரித்து பதிவுத்திருமணம் செய்துக்கொண்டதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டு, அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள், போலிச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, ஆவணங்களை சரிபார்க்காமல் பதிவுத் திருமணம் செய்து வைத்த பூந்தமல்லி சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பதிவுத்துறை ஐ.ஜி.க்கு அவர்கள் உத்தரவிட்டார்.

மேலும், போலிச் சான்றிதழ்களை தயாரிக்க உதவி புரிந்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கு தொடர்பான ஆவணங்களை பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.