credit ns7.tv
கடந்த 1998ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில்தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்ற நிலையில் மாலை இறுதி நிலவரப்படி 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாக்கு சதவீதமானது கடந்த 2015 சட்டப்பேரவை தேர்தலில் பதிவான 67.12%த்தை விட குறைவானதாகும். டெல்லியில் மொத்தம் 1.47 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் எனும் நிலையில் 61% மட்டுமே வாக்குப்பதிவாகியுள்ளது.
1998ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஒரு தேர்தலுக்கு அடுத்து நடைபெற்ற மற்றொரு தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்திருப்பது இதுவே முதன்முறை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 1998ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 48.99% வாக்குகளே பதிவாகியிருந்தன. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்த வாக்கு சதவீதம் அதிகரித்து வந்திருக்கிறது. 2003ம் ஆண்டு தேர்தலில் 53.42 சதவீத வாக்குகளும், 2008 தேர்தலில் 57.58 சதவீத வாக்குகளும், 2013 தேர்தலில் 65.63 சதவீத வாக்குகளும், 2015 தேர்தலில் 67.12 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மத்திய டெல்லியில் உள்ள மதியா மஹால் தொகுதியில் அதிகபட்சமாக 68.36 சதவீதத்தினரும், பவானா சட்டப்பேரவைத் தொகுதியில் குறைந்தபட்சமாக 41.95 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர். புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 28 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அந்த தொகுதியில் 51.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த வாக்கு சதவீதமானது கடந்த ஆண்டை விட 10சதவீதத்திற்கும் மேல் குறைவானதாகும். அரவிந்த் கெஜ்ரிவால் 30,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்ற அந்த தொகுதியில் 64.72 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட அளவில் வடகிழக்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 62.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தென்கிழக்கு மாவட்டத்தில் 54.15 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தலில் 54க்கும் அதிகமான வாக்கு சதவீதத்துடன், 67 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது ஆம் ஆத்மி கட்சி. 32 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்றிருந்த போதும் பாஜக வால் 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.
அதேபோல, தற்போதைய தேர்தலிலும், தேர்தலுக்குப் பின்னான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், இரண்டாவது இடத்தை பாஜக பிடிக்கும் என்றும், காங்கிரஸுக்கு கடந்த ஆண்டைப்போலவே வெற்றி ஏதும் கிடைக்காது என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ம் தேதி நடைபெறுகிறது.