வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக 7000 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்படும் என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், அந்த பேச்சுவார்த்தை எங்களது கோரிக்கைகளுக்கு உடன்பாடு எட்டவில்லை என்பதால் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 60,000 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், மக்கள் படும் சிரமத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல; முழுக்க முழுக்க மத்திய அரசு தான் காரணம் என குற்றம் சாட்டினார். மேலும் இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 16000 கிளைகள் முடங்கியுள்ளது. இதனால் 9 லட்சம் காசோலைகளும் 7000 கோடி பண பரிவர்தனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தை தோல்வியின் காரணமாக இன்றும், நாளையும் போராட்டம் நடைபெறுகிறது என்று கூறிய அவர், மீண்டும் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்காமல் போனால் மார்ச் 11, 12, 13 ஆகிய தேதிகளில் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
credit ns7.tv