தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் முதன்முறையாக அகழாய்வு நடந்தது. அதன்பின் 1902 மற்றும் 1903ம் ஆண்டிகளிலும் அகழாய்வு நடந்தது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் மூலம் 2004ம் ஆண்டிலும் இங்கு அகழாய்வு நடந்தது. ஆனால் இதன் அறிக்கை இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் மாநில அரசு ஜனவரி மாதம் ஆதிச்சநல்லூர், சிவகளை, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பல இடங்களில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று 10 பேர் கொண்ட குழுவினர் தாமிரபரணி ஆற்றின் கரையில் 114 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆதிச்சநல்லூரில் 500க்கு 500 மீட்டரில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தினை தேர்வு செய்து அந்த இடத்தில் சுத்தம் செய்துள்ளனர். பின்னர் அந்த இடத்தில் தரையில் ஊடுருவும் ரேடார் என்ற கருவி மூலம் சுமார் 7 அடி ஆழம் பார்வையிட்டனர்.
இந்த குழுவில் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், ஆதிச்சநல்லூர் கள பொறுப்பாளர் பாஸ்கரன் உள்பட 10 பேர் உள்ளனர். மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் இந்த இடத்தில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் துவங்க உள்ள நிலையில் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv