இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில் அந்நாட்டு தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இலங்கையின் அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே, சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை தமிழில் பாட தடை விதித்தார். இதனால் நேற்று நடைபெற்ற 72வது சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழில் பாடாமல் புறக்கணிக்கப்பட்டது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபரின் சிங்களப் பேரினவாதத்திற்கு தமிழ் மொழியும் தமிழர்களின் உணர்வும் பலிகடா ஆக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு தூதரை அழைத்து பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
credit ns7.tv