வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

பெரும் அவமானத்திற்கு உள்ளானேன்” - மாணவன் கேத்தன் புகார்

Image
முதுமலையில் பழங்குடியின சிறுவனை செருப்பை கழற்ற வைத்த வனத்துறை அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் மீது தாழ்த்தபட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூறி பாதிக்கபட்ட சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் துவக்க நிகழ்ச்சியில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டர். அப்போது அங்குள்ள விநாயகர் கோயிலில் யானைகள் பூஜை செய்வதை காண அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் அழைத்து செல்லபட்டார்.
கோவிலுக்குள் செல்வதற்காக, தான் அணிந்திருந்த காலணியை அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து காலணியை கழற்ற வைத்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அமைச்சரின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது.
இதனையடுத்து உதகையில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுகல் சீனிவாசன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஆதிவாசி சிறுவன் கேத்தன் தெப்பகாடு பகுதி ஆதிவாசி மக்களுடன் சென்று, அமைச்சர் மீது தாழ்த்தபட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், இன்று 6.2.2020 காலை தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாம் தொடர்க்க நிகழ்ச்சி நடைபெறுவதால் அனைவரும் செல்வோம் என நேற்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதன்படி இன்று காலை யானை முகாமில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன், நீலகிரி மாவட்ட ஆட்சியர், அரசியல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரும் வந்தனர். அப்போது கோவில் முன்பாக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து, அமைச்சர் சீனிவாசன் “டேய் வாடா, வாடா, இங்க வாடா” என்று கூப்பிட்டும் கையசைத்தும் அவர் காலில் உள்ள “செருப்பை கழட்டுடா” என்று என்னிடம் கூறினார்.
நான் அமைச்சர் சொல்கிறார் என்பதாலும், உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் இருப்பதாலும் பயந்து கொண்டு அவரது செருப்பை பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் முன்பாக அமைச்சரின் செருப்பை நான் கழட்டி விட்டேன். அப்போது, அருகில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் இருந்தனர். நான் அமைச்சரின் செருப்பை கழட்டிவிடுவதை அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு கூடியிருந்த அனைவரும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அமைச்சர் உள்ளிட்ட அங்கிருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். அனைவரின் முன்பும் என்னை அழைத்து இவ்வாறு செய்ய சொன்ன செயலை நினைத்து பயத்துடன் பெரும் வேதனை அடைந்தேன். எல்லா செய்தி தொலைக்காட்சிகளிலும் உடனடிச் செய்தியாக நான் செருப்பை கழட்டிவிட்ட நிகழ்வு ஒளிப்பரப்பானதை அறிந்ததால் பெரும் அவமானத்திற்கு உள்ளானேன் என்று மாணவர் கேத்தன் கூறியுள்ளார்.
மேலும், நான் பயந்த நிலையிலும் மற்றவர்கள் கேலி செய்வார்களோ என்ற அச்சத்திலும் அழுதுகொண்டே வீட்டில் இருந்தேன். பின்னர் எனது பெற்றோரும் ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தினரும் எனக்கு ஆறுதல் கூறி என்னை தைரியப்படுத்தி எனக்கு ஆதரவளித்ததால் நான் புகார் கொடுக்க மனரீதியாக தயாரானேன்.
எனவே மேற்படி தமிழ்நாடு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று மாணவர் கேத்தன் தெரிவித்துள்ளார்.
கேத்தனிடமிருந்து புகார் மனுவை பெற்று கொண்ட காவல்துறையினர், நாளை காலை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
credit ns7.tv