வெள்ளி, 2 அக்டோபர், 2020

காந்தி ஜெயந்தியன்று உயிரிழந்த கிராமத்து காந்தி தாத்தா!

 கிராமத்து காந்தி தாத்தா என மக்களால் அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரர் குருசாமி இன்று காலமானார். 

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி, பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த குருசாமி எனும் சுதந்திர போராட்ட வீரர் இன்று காலமானார். அவருக்கு வயது 89. உடல்நலக்குறைவு காரணமாக இரவு 12:30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவர் 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். காந்தி மீது கொண்ட பற்றால் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். அதனால் மக்கள் அவரை ‘காந்தி தாத்தா’ என்றே அன்போடு அழைத்து வந்துள்ளனர். இந்த கிராமத்து காந்தி தாத்தா, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் இடையே தேசப்பற்றை விதைக்க பாடுபட்டவர். இவரது மறைவு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.