உத்தரப் பிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று பேரணியில் ஈடுபட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார், இதனை அடுத்து அந்த சிறுமியின் உடல் குடும்பத்தினர் அனுமதியின்றி காவல்துறை பாதுகாப்புடன் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது. குடும்பத்தினர் யாரும் பங்கேற்காத நிலையில் அவசரமாக உடலை தகனம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாடுமுழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று பேரணியில் ஈடுபட்டார். கொல்கத்தாவின் பிர்லா கோளரங்கத்தில் இருந்து காந்தி மூர்த்தி என்ற இடம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் பேரணியின் போது பேசிய மம்தா பானர்ஜி, நான் ஹத்ராஸுக்குச் சென்று பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க விரும்புகிறேன்; என்ன நடந்தது என்பது கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார். மேலும் மனித நேயம் தான் தனது சாதி என தெரிவித்த அவர் தாழ்தப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.