Tamilnadu News Update : தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல இடங்களில் நீர் இரைக்கும் பம்ப் வைத்து தண்ணீரை வெளியேற்றி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்படையினர் திவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகினறனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில், மழையின் தாக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு மக்கள் பெருமளவு சிரமத்தை சந்தித்த வருகின்றனர்.
ஆனால் மக்களின் இயல்குவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வெள்ள பாதிப்புகள் குறித்து எதுவும் கேட்டறியவில்லை என்று அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால தனது வீடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டதாக வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா தனது ட்வீட் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இந்த பதிவில், தனது வீட்டில் வெள்ளம் புகுந்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ள அவர், “வேளச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன், முதலில் எனது வீட்டின் நிலைமையை சரி செய்ய வேண்டும், மீட்பு நடவடிக்கைகளுக்காக வேளச்சேரிக்கு வருவதற்கு முன்பு எனது குடும்பத்தை பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றினேன்” என பதிவிட்டுள்ளார். கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், வேளச்சேரியில் சட்டசபை உறுப்பினர் வீட்டிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அமைச்சர்களுடன் ஆய்வுபணிகளை மேற்கொண்ட நிலையில், அடுத்து வரும் நாட்களில் சென்னையில் கனமழை நீடிக்கும் என்பதால்,தீபாவளி பண்டிகைக்காக ஊருக்குச் சென்றவர்கள் தற்போது சென்னை திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக வேளச்சேரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இருசக்கர வாகனங்கள் கார்கள் வெள்ளத்தில் அடித்துச்சசெல்லப்ட்டது. ஆனால் தற்போது எச்சரிக்கையாகியுள்ள வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பத்திரமாக மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-rain-flood-in-velachery-mla-house-366464/