வியாழன், 2 டிசம்பர், 2021

ஒமிக்ரான் முன் எச்சரிக்கை; இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சோதனை கட்டாயம்: தமிழக அரசு

 1 12 2021 

புதிய கொரோனா மாறுபாடான ஒமிக்ரான் எச்சரிக்கையை அடுத்து, பொது சுகாதார இயக்குநரகம் (DPH) மற்றும் தடுப்பு மருத்துவம், இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (AAI) எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளது.

மேலும், மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் இன்று (டிசம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருவதால், தென்னாப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மொரீஷியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் மற்றும் UK உட்பட ஐரோப்பிய நாடுகள் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு, அவர்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கட்டாய பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமையிலிருந்தே ‘பாதிக்கப்பட்ட’ நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை மற்றும் முடிவுகளைப் பெறுவதற்கான நீண்ட நேரத்தைக் கருத்தில் கொண்டு, விமான நிலைய அதிகாரிகள் T4 முனையத்தில் பரிசோதனைக்காக ஒரு பிரத்யேக நடைபாதையை உருவாக்கியுள்ளனர். இந்த வசதியில் ஒரே நேரத்தில் 450 பயணிகள் பயணிக்க முடியும் என்று விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொது சுகாதார இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம், சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய சர்வதேச விமான நிலையங்களின் விமான நிலைய இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், பரிசோதனையின் போது அறிகுறி தென்படும் பயணிகளை உடனடியாக தனிமைப்படுத்தி, உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஆபத்தில் உள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, வருகைக்கு பிந்தைய கொரோனா பரிசோதனைக்காக, அவர்கள் வருகையின் போதே, அவர்களின் ஸ்வாப்ஸ் எடுக்கப்பட வேண்டும். அத்தகைய பயணிகள் விமான நிலையத்தில் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என்றால், அவர்கள் ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும். இந்தியா வந்த எட்டாவது நாளில் மீண்டும் பரிசோதனை நடத்தப்படும்.

ஒருவேளை பயணிகளுக்கு சோதனையில் கொரோனா தொற்று உறுதியானால், அவர்களின் மாதிரிகள் மரபணு சோதனைக்காக INSACOG ஆய்வக நெட்வொர்க்கிற்கு அனுப்பப்பட வேண்டும். அத்தகைய நபர்கள் ஒரு தனி இடத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் தொடர்புத் தடமறிதல் உட்பட நெறிமுறைகளின்படி சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை நிறுவன அல்லது வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட நாடுகளைத் தவிர பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அவர்கள் 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும்.

சர்வதேச பயணிகள் தங்கள் RT-PCR சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படக்கூடாது என்பதால், அவர்கள் முடிவுகளுக்காக காத்திருக்கும் போது, ​​விமான நிலையத்தில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு பொது சுகாதார இயக்குனர், விமான நிலைய இயக்குனர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-decide-to-test-all-passengers-from-omicron-risk-countries-376891/

Related Posts: