வியாழன், 2 டிசம்பர், 2021

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8 குறைப்பு

 வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 19.40 சதவீதமாக குறைக்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்ததை அடுத்து, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை இப்போது ரூ.95.97 ஆக உள்ளது. குறைக்கப்படுவதற்கு முன், பெட்ரோல் விலை ரூ.103.97 ஆக இருந்தது.

எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டதையடுத்து, நவம்பர் முதல் வாரத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து, டெல்லியில் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி வந்தன. மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, வாட் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் டெல்லியில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், உள்ளூர் வரிவிதிப்பு (வாட்) மற்றும் சரக்குக் கட்டணங்களைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் எரிபொருள் விலை மாறுபடும். இது தவிர வாகன எரிபொருட்களுக்கு மத்திய அரசு கலால் வரி விதிக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த 15 நாட்களில் சர்வதேச சந்தையில் எரிபொருளின் சராசரி விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களின் அடிப்படையில் தினசரி மாற்றியமைக்கப்படுகின்றன.

source https://tamil.indianexpress.com/india/delhi-petrol-diesel-prices-cabinet-meeting-377164/