பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாகக் கூறி யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் வியாழக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவர் போலீஸார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாகச் சொல்லி, முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து, மாரிதாஸ் டிசம்பர் 7ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் இறந்த தகவல் அதிர்ச்சியாக உள்ளது. அதை விட அதிர்ச்சி மீடியா எந்த விவாதமும் இல்லாமல் கடந்து செல்வது. திமுகவிற்கு உற்ற துணையாக மீடியாக்கள் உள்ளன! எனவே எந்த குற்றமும் மறைக்கலாம் திமுக? முதல்வர் துறை ஆகப் பதிலளிப்பது அவர் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக திமுகவினர் கேலி செய்யும் விதமாக பதிவிடுகின்றனர். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்று மாரிதாஸ் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “திக திமுக ஆதரவாளர்கள் பலரும் இராணுவ தளபதி விபத்தில் மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக emoji போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.” என்று விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக யூடியூபர் மாரிதாஸ் அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டதாக மதுரையில் உள்ள அவருடைய இல்லத்தில் மாரிதாஸை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் மதுரை புதூரில் உள்ள மாரிதாஸின் வீட்டுக்கு அவரை கைது செய்ய சென்றபோது, பாஜக ஆதரவாளர்கள் பலரும் திரண்டனர். பாஜக நிர்வாகிகள் சிலர் மாரிதாஸை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் அவரைக் கைது செய்து அழைத்து சென்றனர்.
யூடியூபர் மாரிதாஸின் கைது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், விமானப்படை, மத்திய அரசின் கருத்துகளுக்கு எதிரான கருத்தை மாரிதாஸ் பதிவிட்டுள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து அவற்றை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்று தெரிவித்தனர்.
பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிஸ்தாஸ், தொடர்ந்து திமுகவையும் தமிழக அரசையும் விமர்சித்து வந்த நிலையில், பாதுகாப்பு தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாகக் கூறி யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் வியாழக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
source https://tamil.indianexpress.com/tamilnadu/youtuber-maridhas-arrested-for-tweets-about-wrong-opinion-against-govt-380930/