வியாழன், 2 டிசம்பர், 2021

கல்லூரி மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்: சென்னையில் பேராசிரியர் கைது

 சென்னையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆங்கில பேராசியரியரை கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் 2 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீப வருடங்களாக இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளிடம், ஆசிரயர்களே பாலியல் தொல்லையில் ஈடுபடுவது, ஆபாசமாக பேசுவது, மொபைலுக்கு ஆபாச செய்தி மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது என பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகினறனா. இந்த செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவர முடியாத போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாலும், மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வன் என்பவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு மொபைல் மூலம் ஆபாசமாக குறுஞ்செய்து அனுப்பியுள்ளார். மேலும் இதே போன்று பல மாணவிகளுக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் கடந்த 2 நாட்களாக கல்லூரியில் உள்ளிறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில், ஆசிரியர் தமிழ்ச்செல்வன் கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனாலும் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், மாணவியிடம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தகவல் வெளியானதை தொடர்ந்து ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமறைவான நிலையில், சென்னை போரூர் பகுதியில் இருந்த அவரை போலீசார் கைது இன்று செய்துள்ளனர். தொடர்ந்து அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும் என்று போலீசார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-college-professor-arrested-for-sexual-harassment-case-377283/