வெள்ளி, 3 டிசம்பர், 2021

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் பற்றி அறிக்கை அளிக்காவிட்டால் தலைமைச் செயலருக்கு சம்மன்; ஐகோர்ட் எச்சரிக்கை

 தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்தும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால், தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீர்நிலைகளில் வீடுகள், நீரேற்று நிலையங்கள், காவல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்டோர் மனுதாரர்கள் குற்றம்சாட்டினர். மாநிலத்தில் உள்ள பல நீர்நிலைகளை அரசே ஆக்கிரமித்துள்ளது என்று மனுதாரர் கூறினார்.

சிட்லபாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முன்னோடித் திட்டம் குறித்து விளக்கி, கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதில் “நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அரசு முடிவு செய்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க, நீர்நிலைகளின் முறையான வரைபடம் உருவாக்கப்படும். மேலும், நீர்நிலைகளை கண்காணிக்க குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) மற்றும் ஜியோ இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (ஜிஐஎஸ்) ஆகியவை செயல்படுத்தப்படும். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு மின் இணைப்புகளோ, நில ஆவணங்களோ வழங்கப்பட மாட்டாது” என தெரிவித்தார்.

நீதிபதிகள் இந்த அறிக்கையை பதிவு செய்தபோது, ​​சென்னையில் அதிக மழை பெய்தாலும், குறைந்தது நான்கு மாதங்களாவது தண்ணீர் வறண்டு கிடப்பதை திருத்தப்பட்ட ஒப்புதல் தீர்ப்பில் கவனித்தது. மேலும், நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவது முக்கியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், டிசம்பர் 8ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரம்ப்புக்களை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தாக்கல் செய்த மனுவில் “உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9,802 நீர்நிலை ஆக்கிரமிப்புக்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 210 நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள், “மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 ஆண்டுகளுக்கு முன்பே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்படும்” என்று எச்சரிக்கை தெரிவித்தனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/status-report-encroachments-on-water-bodies-hc-warns-summon-to-chief-secretary-377527/