2 12 2021 தெற்கு அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும். பிறகு புயலாக வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே டிசம்பர் 4ம் தேதி அன்று கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை அறிவிப்பு
தமிழகத்தைப் பொறுத்த வரை புதிதாக உருவாகும் புயலால் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை. ஆனால் ஒரிசாவை நோக்கி நகரும் போது மழைக்கான வாய்ப்புகள் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு உண்டு. இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது. நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. இரண்டு நாட்களிலும் உள் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்த வரையில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக மழைப்பொழிவை பெற்ற இடங்கள்
திருவண்ணாமலை வந்தவாசியில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கரில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தேனியின் வீரபாண்டி, வேலூரின் காட்பாடி பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/low-pressure-area-over-south-andaman-sea-intensified-into-deep-depression-377370/