செவ்வாய், 7 டிசம்பர், 2021

ஒமிக்ரான் லேசான பாதிப்பை … தரவுகள் சொல்வது என்ன?

 6 12 2021 தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா, தற்போது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இது கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் மதிப்பை குறைக்கும் என்ற அச்சம் எழும்பியுள்ளது.

இருப்பினும், ஒமிக்ரான் மாறுபாடின் விளைவை கண்டறியும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை, மிகவும் லேசான அளவிலே ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தாலும், அதன் தீவிரத்தை உடனடியாக முடிவுசெய்வது சரியில்லை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தரவு சொல்வது என்ன?

புதிய மாறுபாடின் ஆரம்பகால பாதிப்பின் தரவு முடிவுகள் குறைவாக தான் கிடைத்துள்ளன. நோய் தீவிரம் குறித்து ஐரோப்பியாவில் பாதிப்புக்குளான 70 பேரின் தரவுகள் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பாதி பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை. மற்றவர்களுக்கு லேசான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

அதே போல், நோய் தீவிரமடைந்து மருத்துவமனை அனுமதித்தல் அல்லது உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் இதுவரை பதிவாகவில்லை.

இருப்பினும், நோய் தீவிரத்தை துல்லியமாக மதிப்பிடுவதற்கு நூற்றுக்கணக்கான பேரின் தரவு தேவைப்படும். ஆனால் அதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று ஐரோப்பிய நிறுவனம் மதிப்பிடுகிறது.

இதுவரை கண்டறியப்பட்ட பெரும்பாலான பாதிப்புகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இளையவர்களிடமே காணப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் கடுமையான நோய் தீவிரத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என சொல்லப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில், புதன்கிழமையன்று கோவிட்-19 பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை இரட்டிப்பாகி 8,561 ஆக இருந்தது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கும், தடுப்பூசி போட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறிகுறிகள் லேசாக தெரிகிறது.

அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான டாக்டர். கார்லோஸ் டெல் ரியோ கூறுகையில், “தென் ஆப்பிரிக்கா பாதிப்பு தரவுப்படி, மிகவும் லேசான அளவிலே நோய் பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் இளம் மாணவர்களிடம் தான் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

கொரோனாவின் லைட் வெர்ஷன் தான் ஒமிக்ரானா?

நிஜ உலக ஆய்வக முடிவுகளை வைத்து, ஒமிக்ரான் பாதிப்பை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பாய்வு செய்கின்றனர். இதுவரை எந்த வைரஸ் மாறுபாடிலும் காணாத சுமார் 50 பிறழ்வுகள் இருந்தன. அதில் 30 க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் ஸ்பைக் புரதத்தை கொண்டிருந்தது. தற்போதைய பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஸ்பைக் புரதத்தை தான் டார்கெட் செய்கின்றன.

இதுகுறித்து பிலடெல்பியாவில் உள்ள பென் இன்ஸ்டிடியூட் ஃபார் இம்யூனாலஜியின் இயக்குனர் டாக்டர் ஜான் வெர்ரி கூறுகையில், “சாதாரணமாக வைரஸ்கள் அதிகளவில் பிறழ்வுகளை உருவாக்குகையில், அதன் வீரியத்தை இழக்கக்கூடும்.சில ஓமிக்ரான் பிறழ்வுகள் வைரஸின் பாதிப்பு திறனைக் குறைக்கலாம். அதனால் ஸ்பைக் புரதத்தின் செயல்பாட்டில் மாற்ற ஏற்படலாம்.

மேலும், தென்னாப்பிரிக்காவில் உள்ள எச்ஐவி நோயாளி போன்ற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரிடம், பல மாதங்களாக ஒமிக்ரான் உருவாகியிருக்கலாம் அல்லது விலங்கிடம் உருவாகியிக்கலாம் போன்ற பல்வேறு கூற்றுகளை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்” என்றார்.

ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஒமிக்ரான் மாறுமா?

மக்களிடையே பரவலாக இருக்கும் ஒரே கேள்வி, உலகளவில் ரூத்ரதாண்டவம் ஆடிய கொரோனாவின் டெல்டா வேரியண்டை காட்டிலும் பாதிப்பு ஏற்படுத்துமா என்பது தான். இதற்கு பதிலளித்த தொற்று நோய் ஆராய்ச்சியாளர் சுமித் சந்தா, “ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்தினாலும், லேசான பாதிப்பு காரணாக அது காய்ச்சல் போன்ற பருவகால அச்சுறுத்தலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது சுகாதார நிறுவனம் , ஒரிரு மாதங்களுக்குள் ஐரோப்பாவில் பதிவாகும் கோவிட் 19 பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டதற்கு ஒமிக்ரான் மாறுபாடு காரணமாக இருக்கலாம் என கூறுகிறது.

ஒமிக்ரான் குறித்து ஆராய்ச்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பூசிசெலுத்துவது, பூஸ்டர் டோஸ் பெறுவது, உட்புற அல்லது கூட்டமான இடங்களில் மாஸ்க் அணிவது, அவ்வப்போது கைகளை கழுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கட்டாயம் என கூறுகின்றனர்.

source https://tamil.indianexpress.com/explained/could-the-omicron-variant-bring-milder-illness-379357/