தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் அழைப்பிதழ் இந்தி எதற்கு என்று விசிக செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ட்விட்டரில் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று 37வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் பெற உள்ள மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரும் பலகலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று ஆளுநருக்கு பட்டமளித்து உரையாற்றுகிறார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று அங்கே இருந்து பல்கலைக்கழகத்துக்கு சென்று விழாவில் கலந்துக்கொள்கிறார்.
ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் பல்கலைக்கழக விழா நிகழ்ச்சி இது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் அழைப்பிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழைப்பிதழில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி படமும் ஒரு புறமும் மற்றொரு புறம் மு.க.ஸ்டாலின் படமும் உள்ளது. நடுவில் இந்தி வார்த்தை இடம் பெற்றுள்ளது.
அதாவது 75வது ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் என்று இந்தி வார்த்தை ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அழைப்பிதழில் இந்தி எதற்கு என்று விசிக செய்தித்தொடர்பாளர் வன்னி அரசு ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் மாளிகையை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளர்.
இது குறித்து வன்னி அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.தமிழர்கள் தான் நாளை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்கள். பட்டம் பெறுபவர்களும் தமிழ்இளைஞர்கள் தான். ஆனால் திட்டமிட்டே இந்தி திணிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ் அழகிய தாய்மொழியில் வரவேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து இந்தி திணிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிற நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்தி வார்த்தை இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/hindi-word-in-bharathidasan-university-convocation-invitation-vck-questions-hindi-imposed-380658/