சனி, 4 டிசம்பர், 2021

குஜராத் கலவரம் யாருடைய ஆட்சியில் நடந்தது’ – சர்ச்சை கேள்விக்கு சிபிஎஸ்இ மன்னிப்பு

 

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு முதல்பருவ தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதற்கு மன்னிப்பு தெரிவித்து காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.

‘குஜராத்தில் 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, எந்த அரசியல் கட்சி ஆட்சி செய்யும் போது நடைபெற்றது?’ என்ற கேள்வி சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முதல் பருவ சோஷியாலஜி பாட தேர்வில் இடம்பெற்றுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலாக 4 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அதில், பாஜக, காங்கிரஸ், ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என கொடுக்கப்பட்டு, அதில் ஒன்றை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கேள்வி சர்ச்சையான நிலையில், உடனடியாக சிபிஎஸ்இ தரப்பில் மனிப்பு கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிளஸ் 2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி முறையற்றது. கேள்வித்தாள் அமைப்பதற்காக வந்த ஆசிரியர்கள், சி.பி.எஸ்.இ., விதிமுறைகளை மீறியுள்ளனர். தவறு நடந்துள்ளதை சிபிஎஸ்இ ஒப்பு கொள்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என பதிவிட்டிருந்தது.

தொடர்ந்து, மற்றொரு பதிவில், பொதுத்தேர்வு வினாக்கள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்.மதம் மற்றும் வகுப்புவாத நடுநிலைத்தன்மையுடன் கேள்விகள் அமைய வேண்டும்.சமூகம் மற்றும் அரசியல் விருப்பங்களுக்கேற்ப பொதுமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வினாக்கள் அமையக்கூடாது என்பதை வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

இந்த கேள்வி என்சிஇஆர்டி 12 ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகமான ‘Indian Society’யில், ‘The Challenges of Cultural Diversity’ என்ற சேப்டரின் கீழ் உள்ள ஒரு பத்தியிலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதில், இரண்டு பெரும் அதிர்ச்சிகரமான சமகால வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் முக்கிய அரசியல் கட்சிகளின் கீழும் நிகழ்ந்தன. 1984இல் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் காங்கிரஸ் ஆட்சியிலும், 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பாஜக ஆட்சியிலும் நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

சிபிஎஸ்இ தேர்வு செயல்முறை பொதுவாக இரண்டு பாட நிபுணர்களின் பேனல்களை உள்ளடக்கியது. ஒன்று வினாத்தாள் அமைப்பாளர்கள் மற்றொருன்று மதிப்பீட்டாளர்கள். நிபுணர்களின் குறித்த தகவல் இரண்டு பேனல்களுக்கும் தெரியாது. மேலும் வினாத்தாள் அமைப்பவர்கள் தங்கள் கேள்விகள் வினாத்தாள்களில் இடம்பெறுமா என்பது கூட தெரியாது.

வினாத்தாள்கள் ஒவ்வொன்றும் மதிப்பீட்டாளர் குழு பார்வையிடும். அவர்கள்,கேள்விகள் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதா, பாடப் புத்தகங்கள்/ பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் இருந்து அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கு மார்க் வெயிட்டேஜ் பிரித்து கேள்வித்தாளை தயார் செய்வார்கள் வினாத்தாள்கள் இறுதி செய்யப்பட்டு சிபிஎஸ்இக்கு சமர்ப்பிக்கப்படும்.

source https://tamil.indianexpress.com/education-jobs/under-which-govt-did-2002-gujarat-violence-happen-cbse-calls-question-an-error-377676/