மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களின் பெயர்கள் மற்ற மொழி பேசுவோருக்கு உச்சரிக்கக்கூட சிக்கலாக உள்ளதால், அனைத்து மாநில மக்களுக்கும் புரியும்படி ஆங்கிலத்திலோ அல்லது பிராந்திய மொழிகளிலோ வைப்பதில் என்ன பிரச்சனை என திமுக எம்பி கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
பிரதமரால் அறிவிக்கப்படும் திட்டங்களின் பெயர்கள் மற்ற மொழி பேசுபவர்களால் உச்சரிப்பதற்கு கூட தடுமாறும் பட்சத்தில், அந்த திட்டம் குறித்த பயன்கள் மக்களை எப்படி சென்றடையும் என மக்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி எம்.பி, சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் அந்தந்த மாநில மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலேயே திட்டங்களின் பெயர்களை வைக்கலாமே என வலியுறுத்தியுள்ளார்.
ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” எனப்படும் சுய-சார்பான இந்தியா இயக்கம் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட்டது. பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், துடிப்பான மக்கள் மற்றும் தேவை ஆகியன நாட்டின் 5 தூண்கள் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு சமமான 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரத் தொகுப்பினை அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் இந்தியா அளித்த நெட் ஜீரோ உள்ளிட்ட உறுதிமொழிகள் குறித்தும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்தும், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் மக்களவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எழுந்து பேசிய திமுக எம்பி கனிமொழி, “ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” என்ற திட்டத்தின் பெயரை உச்சரிக்க மிகவும் சிரமப்பட்டதாக தெரிகிறது. அந்த வார்த்தை இந்தி என்பதால் கனிமொழியால் தெளிவான உச்சரிப்புடன் கூறமுடியவில்லை. அப்போது அதை சரியாக உச்சரிக்க சபாநாயகரும் மற்ற வடமாநில உறுப்பினர்களும் உதவினர்.
இதையடுத்து இந்தியில் உள்ள திட்டப் பெயர்கள் புரியும்படி இல்லை என நகைச்சுவையாக மக்களவையில் கூறினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்படும் மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை உச்சரிப்பதற்கே சிரமமாக இருக்கிறது என குறிப்பிட்டார். திட்டங்களின் பெயரை உச்சரிக்கவே கடினமாக இருக்கும்போது அந்த திட்டத்தின் பயன்களை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என கேள்வி எழுப்பினார். பன்மொழி கொண்ட இந்திய நாட்டில் அனைவருக்கும் இந்தி தெரியாது என்பதால், அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் அந்தந்த மாநில மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலேயோ திட்டங்களின் பெயர்களை வைப்பதில் என்ன சிக்கல் எனவும் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஒரு உறுப்பினர், “உங்களுக்கு புரியாமல் போனால் நாங்கள் என்ன செய்வது?” என கேட்க, அதற்கு சட்டென்று பதிலடி தந்த கனிமொழி “சரி இனிமேல் தமிழிலே பேசுகிறேன்… உங்களுக்கு புரியுதானு சொல்லுங்க” என சிரித்தப்படியே கேட்டார்.
மேலும், இந்தியில் பேச நாடாளுமன்றத்தில் எந்த தடையும் இல்லை, ஆனால் மற்ற மொழிகளில் பேசுவதாக இருந்தால் மொழிபெயர்ப்பாளர்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்வதற்காக முன் அனுமதி பெறவேண்டும் எனக் கூறிய கனிமொழி, அதேவேளையில் இந்தியில் பேசும்போது அதை மற்றவர்களுக்கு மொழி பெயர்க்க எந்த ஏற்பாடுகளும் நாடாளுமன்றத்தில் இல்லை என்றும் கனிமொழி குறிப்பிட்டார். இவ்வாறு மக்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.