Warn before opening Mullaiperiyar dam: சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் தமிழக அரசு இரவு நேரத்தில் மதகுகள் வழியாக நீரை வெளியேற்றியது. பொதுவாக பகல் நேரங்களில் நீரை திறக்க வேண்டும் என்பதே விதிமுறை. இந்நிலையில் தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இது குறித்து எழுதிய கடிதம் ஒன்றில் முறையான எச்சரிக்கைகள் கொடுத்த பிறகு பகல் நேரங்களில் மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை அன்று அதிகாலை 3.30 மணி அளவில் 1 முதல் 8 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்ற பினராயி விஜயன், 6,413 கன அடி நீர் அதிகாலை திறக்கப்பட்டது குறித்து போதுமான முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படவில்லை. 4 மணி அளவில் 10 மதகுகள் வழியாக 8,017 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது என்று கூறிய விஜயன், தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சங்கள் மற்றும் குழப்பங்களுக்கு முடிவைத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தை கேரள அரசு புரிந்து கொள்கின்ற அதே நேரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். எனவே முறையாக திட்டமிடப்பட்டு பகல் பொழுதுகளில் மட்டுமே நீரை வெளியேற்ற வேண்டும் என்றும் பினராயி கூறியுள்ளார். மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைச் சமாளிக்க அண்டை மாநிலங்கள் விவாதித்து திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டின் அதிகப்படியான நீரை முல்லைப் பெரியாறு ஆற்றில் திறந்துவிட்ட நிலையில் வியாழன் அன்று காலை வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு, சப்பத்து மற்றும் உப்புத்தரா பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது என்ற அறிவிப்பை வெளியிட்ட வாகனத்தை வல்லக்கடவு மக்கள் முற்றுகையிட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கொல்லம் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் சொக்கன்பட்டி வனப்பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக புதன்கிழமை நள்ளிரவு மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டியது முல்லைப் பெரியாறு. கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக இரவு 10 மணிக்கு மேல் மதகுகள் வழியாக தமிழக அரசு நீரை வெளியேற்றியுள்ளது.
இரவு நேரங்களில் முன்னறிவிப்பின்றி மதகுகளை திறக்க வேண்டாம் என்று ஏற்கனவே தமிழக அரசிடம் அறிவித்துள்ளதாக கேரள நீர்வளத்துறை அமைச்சர் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக அந்நிறுவனத்தின் செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள மேற்பார்வை குழுவிடம் முறையாக புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது வைகை அணையில் சேமிக்கப்படுகிறது. ஆனால் தேனியில் உள்ள வைகை அணையின் நீர்மட்டமும் முழுக்கொள்ளளவை எட்டியதால் வியாழக்கிழமை முழுவதும் 14 மதகுகளும் திறக்கப்பட்ட நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது 3 12 2021
source https://tamil.indianexpress.com/tamilnadu/warn-before-opening-mullaiperiyar-dam-kerala-tells-tamil-nadu-377926/