Julian Assange : அரசியல் மற்றும் ராணுவ ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தலாம் என்று பிரிட்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்க சிறையில் தற்கொலை முயற்சியை ஜூலியன் மேற்கொள்ளலாம் என்று கருதி ஜனவரி நான்காம் தேதி அன்று அவரை அமெரிக்காவிற்கு அனுப்ப முடியாது என்று பிரிட்டனின் கீழ் நிலை நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து அமெரிக்கா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது உயர் நீதிமன்றம். விசாரணையின் முடிவில் அவரை நாடு கடத்தலாம் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த முறை, அசாஞ்ச் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நாடு கடத்தப்பட்டால் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யலாம் என்றும் மருத்துவர்கள் கூறியதைக் கருத்தில் கொண்டு, அசாஞ்சே தற்கொலைக்கு முயற்சிக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று நீதிமன்றத்திற்கு அமெரிக்கா உறுதியளித்தது.
அமெரிக்காவில், உளவு சட்டம் மற்றும் கணினி மோசடி மற்றும் துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் அசாஞ்சே கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார். உளவு சட்டம், தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை உள்நோக்கத்துடன் பொதுமக்கள் பெறுவதை தடுக்கிறது. மேலும் இது அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் மற்ற நாட்டினருக்கு சாதகமாக பயன்படுத்தப்படலாம் என்றும் நம்புகின்றனர்.
சர்வதேச அம்னாஸ்டி அமைப்பு ஜூலியனுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுமாறும், அவரை நாடுகடுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. . 2016 இல், ஐக்கிய நாடுகளின் குழுவும் அசாஞ்சேக்கு ஆதரவாகப் பேசியது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தனது ட்விட்டர் கணக்கில், இது நீதியின் கேலி கூத்து. ராஜதந்திர குற்றவாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அதிக பாதுகாப்பைக் கொண்டுள்ள தனிமைச் சிறைகளில் இவர் அடைக்கப்படமாடார் என்ற ஆழமான குறைபாடு உடைய அமெரிக்காவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
அசாஞ்சேவின் இணையர் ஸ்டெல்லா மோரீஸ் இந்த நாடுகடத்தலுக்கு எதிராக போராட நிதி திரட்டி வருகிறார். ஆயுதமற்ற பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அப்பாவி மக்கள் சித்திரவதை செய்யப்பட்டதையும் ஜூலியன் அம்பலப்படுத்தினார். இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்ய விரும்பியவர்கள் இதன் மூலம் ஜூலியனை அவர் வாழ்நாள் முழுவதும் ஆழமான, இருண்ட மூலையில் புதைக்க விரும்புகின்றனர். ஜூலியன் 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார் என்று மோரீஸ் உருவாக்கியுள்ள க்ரவுட் சோர்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரிந்த ஜூலியன் அசாஞ்சே? அவர் என்ன செய்தார்?
தன்னை பன்னாட்டு ஊடகவியல் அமைப்பு மற்றும் நூலகம் என்று அறிவித்துக் கொள்ளும் விக்கிலீக்ஸ் 2010ம் ஆண்டு அமெரிக்க ராணுவ அதிகாரி செல்ஷி மேன்னிங் ஒப்படைத்த லட்சக் கணக்கான போர், ராஜதந்திர மற்றும் ராணுவ ஆவணங்களை வெளியிட்டது. அமெரிக்காவின் அப்பாச்சே ஹெலிகாப்டர் இரண்டு ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் உட்பட 12 பேரை சுட்டுக் கொள்ளும் காட்சிகள் அடங்கிய பல்வேறு போர் ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
டிசம்பர் 2018இல், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களால் செய்யப்பட்ட 16,000 க்கும் மேற்பட்ட கொள்முதல் கோரிக்கைகளின் தேடக்கூடிய தரவுத்தளத்தை இணையதளம் வெளியிட்டது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அசாஞ்சே 2006ம் ஆண்டு விக்கிலீக்ஸை நிறுவினார். விக்கிலீக்ஸ் என்பது உலகின் மிகவும் துன்புறுத்தப்பட்ட ஆவணங்களின் மாபெரும் நூலகமாகும். நாங்கள் இந்த ஆவணங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறோம், அவற்றை பகுப்பாய்வு செய்து, விளம்பரப்படுத்துகிறோம், மேலும் பலவற்றைப் பெறுகிறோம் என்று 2015ம் ஆண்டு ஸ்பீகலுக்க் அளித்த பேட்டியில் ஜூலியன் கூறினார். தற்போது இந்த தளத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் உள்ளன. விக்கிலீக்ஸ் ஆவணங்களை அதிகமாக படிக்கும் மக்கள் இந்தியர்களாக உள்ளனர். அவர்களை தொடர்ந்து அமெரிக்கர்கள் படிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
இங்கிலாந்தில் அசாஞ்சே இருக்க காரணம் என்ன?
2010ம் ஆண்டு இரண்டு பெண்கள் அசாஞ்சேவின் மீது வைத்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்வீடன் நாடு விசாரணை மேற்கொண்டது. மேலும் அந்த சமயம் இங்கிலாந்தில் இருந்த அசாஞ்சேவை நாடுகடத்த வேண்டும் என்றும் ஸ்வீடன் கேட்டு கொண்டது. ஸ்வீடிஷ் வாரண்டிற்கு எதிராக போராட முயற்சித்த அசாஞ்ச், 2011 இல் பிரிட்டிஷ் நீதிமன்றத்தை அணுகினார். தீர்ப்பு அவருக்குச் சாதகமாகப் போகவில்லை, பின்னர் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தோல்வி அடைந்தார்.
ஜாமீனில் வெளிவந்த அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்குவேடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது இடதுசாரி தலைவர் ரஃபேல் கொரியா தலைமையில் லத்தீன் அமெரிக்க நாடான ஈக்குவேடார் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அப்போது இருந்து அவர் லண்டனில் உள்ள ஈக்குவேடார் தூதரகத்தில் தான் தங்கியுள்ளார். 2019ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறினால் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம். அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அமெரிக்காவிற்கு அவரை நாடு கடத்தவே இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/explained/what-happens-to-julian-assange-if-he-is-extradited-to-the-us-381704/