அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கியதன் மூலம் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் சசிகலா எதிர்ப்பை உறுதி செய்துள்ளனர்.
அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு முன்னாதாக, கடந்த வாரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்.பி-யும் அதிமுக சிறுபான்மையினர் பிரிவு செயலாளருமான அன்வர் ராஜா, அதிமுக தலைமையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்ததையடுத்து அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டாக வெளியிட்ட அறிக்கையி ல், ராஜாவை அதிமுகவில் இருந்தும் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று அறிவித்தனர். ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகவும், கட்சியின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கத்திற்காகவும், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூலம் நீக்கப்படுகிறார்” என்று அறிவித்தனர்.
சமீபத்தில், அன்வர் ராஜா அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளையும் இலக்குகளில் இருந்து விலகி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைக்க ராஜா எழுந்தார், ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா அதிர்ச்சியடைந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நேர்காணலில் பங்கேற்ற அன்வர் ராஜா, எடப்பாடி பழனிசாமியை சின்ன அம்மா (சசிகலா) தான் முதலமைச்சராக்கினார் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததாலும், அதிமுக இரட்டைத் தலைமையுடன் முரண்பாடான அணுகுமுறையை மேற்கொண்டதாலும் அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுக தொண்டர்களுக்கும் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்பதையும் சசிகலா எதிர்ப்பையும் மறைமுகமாக உறுதி செய்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/ops-and-eps-removed-anwar-raja-from-aiadmk-and-confirmed-no-space-to-sasikala-377003/