வியாழன், 2 டிசம்பர், 2021

தீப்பெட்டி விலை 2 மடங்கு உயர்வு; அமலுக்கு வந்தது புதிய விலை உயர்வு

 Tamil Nadu news in tamil: தமிழகத்தின் குடிசை தொழில்களில் ஒன்றாக “தீப்பெட்டி தயாரிப்பு தொழில்” இருந்து வருகிறது. தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் இந்த தொழிலை நம்பியுள்ளனர். தமிழகம் முழுதும் 50 முழுநேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகளும் உள்ளன. இவற்றை சார்ந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

6 லட்சம் தொழிலாளர்கள் – 90 சதவீதம் பெண்கள்

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் பணிபுரிபவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் தான்.

விலைவாசி உயர்வு

கொரோனாவுக்கு பின் இந்தியாவில் எரிபொருட்களின் விலையில் உயர்வு ஏற்பட்டது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. மத்திய – மாநில அரசுகள் விதிக்கும் வரிகளில் விலக்கு அளித்த பிறகும் அவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால், அத்தியவாசிய பொருட்களின் விலையிலும் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், அனைத்து துறைகளிலும் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தீப்பெட்டி மூலப்பொருள் விலை உயர்வு

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ பாஸ்பரஸ் ரூ.410 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூபாய் 850-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மெழுகு ஒரு கிலோ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாயாகவும், குளோரைட் 70 ரூபாயில் இருந்து ரூ.82 ஆகவும், அட்டை 42 ரூபாயில் இருந்து ரூ. 55-ஆகவும் உயர்ந்துள்ளது.

1 ரூபாய் தீப்பெட்டி இனி 2 ரூபாய்

இந்த பன்மடங்கு விலையுர்வு தற்போது தீப்பெட்டி உற்பத்தியையும் பெருமளவில் பாதித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் அதன் விலையை உயர்த்த வேண்டிய காட்டயாத்தில் தாங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தீப்பெட்டி விலையை ரூ.1ல் இருந்து ரூ.2 ஆக உயர்த்துவது என உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விலையுர்வு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தனர். இதன்படி, இன்று முதல் தீப்பெட்டி விலை ‌உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 14 வருடங்களுக்குப் பிறகு, தீப்பெட்டி விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-in-tamil-matchbox-price-increase-in-tn-from-today-onwards-rs-2/