செவ்வாய், 7 டிசம்பர், 2021

இந்தியாவில் வேகமெடுக்கும் ஒமிக்ரான்

 6 12 2021 இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா, ராஜாஸ்தான், டெல்லி,கர்நாடகா என பல மாநிலங்களில் ஊடுருவிய ஒமிக்ரானால், அதன் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

முதல் இரண்டு பாதிப்புகள் கர்நாடகாவிலும், அதனை தொடர்ந்து குஜராத்தின் ஜாம்நகரில் ஒன்றும், மகாராஷ்டிராவில் ஒன்றும் பதிவானது.

ஜெய்ப்பூரில், ஒமிக்ரான் தொற்று உறுதியான 9 பேரும், நவம்பர் 28 ஆம் தேதி திருமண நிகழ்வில் ஒன்றில் பங்கேற்றதாக அம்மாநில சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த திருமண நிகழ்வில் சுமார் 100 பேர் பங்கேற்றாதாகவும், அதில் 34 பேரின் மாதிரிகளை சேகரித்து சோதனை செய்ததில், 25 பேருக்கு இதுவரை நெகட்டிவ் என ரிப்போட் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதிப்புக்குளான 9 பேரில் 4 பேர், அண்மையில் தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ளனர்.அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.

பூனேவில் 44 வயது பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் அந்த பெண் தனது இரண்டு மகள்கள் வயது 12 மற்றும் 18 ஆகியோருடன் நைஜீரியாவில் இருந்து நவம்பர் 24ஆம் தேதி இந்தியா வந்துள்ளார். மூவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல், அப்பெண்ணின் 45 வயதாகும் சகதோரர் மற்றும் அவரது மகள்கள் 7 வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மூன்று பெரியவர்களும் முழுமையான தடுப்பூசியை செலுத்திகொண்டவர்கள் ஆவர். இருவர் கோவிஷீல்டும், ஒருவர் கோவாக்சினும் செலுத்தியுள்ளனர்.

இவர்களை தவிர, புனேவுக்கு வந்த 47 வயதான நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர், நவம்பர் 18 முதல் 25 ஆம் தேதி வரை, பின்லேண்ட் சென்றதாக கூறப்படுகிறது. அவரும் கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்திகொண்டவர் ஆவர்.

டெல்லியை பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட 30 வயதான நபர், தான்சானியா நாட்டிலிருந்து வந்துள்ளார். தற்போது அவர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் விமானத்தில் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தான்சானியாவில் இருந்து வந்த நபரும், முழுமையாக தடுப்பூசி செலுத்திகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்கா,இங்கிலாந்து போன்ற ஆபத்தான நாடுகள் என வரையறுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் இருந்து டெல்லிக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டு, அவர்கள் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். கொரோனா தொற்று இருப்பது உறுதியானால், அவர்கள் டெல்லி அரசு மருத்துவமனையான எல்என்ஜேபிக்கு அனுப்பப்படுவார்கள் என அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/india/covid-omicron-cases-in-jaipur-pune-delhi-21-detected-so-far-379245/