செவ்வாய், 7 டிசம்பர், 2021

பாஜகவில் சேர பணம், அமைச்சர் பதவி தர முயன்றனர்- பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவர் குற்றச்சாட்டு

 Punjab AAP president Bhagwant Mann

Punjab AAP president Bhagwant Mann : பாஜகவில் சேர்ந்தால் பணம் மற்றும் மத்திய அமைச்சரவையில் பொறுப்பு தருவதாக பாஜக மூத்த தலைவர் தன்னை அணுகியதாக பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி தலைவரும் எம்.பியுமான பக்வந்த் மான் அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக ஆம் ஆத்மி கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்களை வாங்கும் நோக்கில் இதே போன்று அவர்களையும் அணுகியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

பாஜகவில் சேர உங்களுக்கு எவ்வளவு பணம் என்று கேட்டார். மேலும் ஆம் ஆத்மியின் ஒரே எம்.பியாக நீங்கள் இருப்பதால் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது. உங்களுக்கு விரும்பிய அமைச்சரவை பொறுப்பை நீங்கள் கேளுங்கள் என்று மூத்த பாஜக தலைவர் என்னை அணுகினார் என்று பக்வந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

பஞ்சாபின் சங்க்ரூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பக்வந்த் தனக்கு அளிக்கப்பட்ட இந்த சலுகையை வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். நான் ஒரு மிஷனில் இருக்கின்றேன். கமிஷனுக்காக பணியாற்றவில்லை என்று அவர் பதில் அளித்ததாக தெரியவந்துள்ளது. ரத்தத்தாலும் வியர்வையாலும் ஆம் ஆத்மியை பஞ்சாபில் வளர்த்துள்ளேன். கட்சியை கைவிட்டு சென்றுவிட இயலாது என்றும் அவர் கூறினார்.

பஞ்சாபில் பாஜகவிற்கு சிறிதும் கூட அந்தஸ்த்து இல்லை. மூன்று வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டதாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்ததாலும் பாஜக தலைவர்களால் ஒரு கிராமத்திற்குள் கூட நுழைய இயலவில்லை. பஞ்சாபின் எதிர்காலத்தை மனதில் கொண்டுள்ள எவரும் லக்கிம்பூர் கேரியில் பலரின் மரணத்திற்கு காரணமான கட்சியில் சேர மாட்டார்கள் என்றும் மன் கூறினார்.

எங்கள் எம்எல்ஏக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களையும் பாஜக அணுகியுள்ளது என்று தெரிவித்த அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மேலும் பல உண்மைகள் வெளி வரும் என்றும் தெரிவித்தார்.

அவரை அணுகிய பாஜக தலைவர் யார் என்று கேள்வி எழுப்பிய போது தக்க நேரம் வரும் போது கூறுகிறேன் என்று குறிப்பிட்டார். மேலும் பாஜக இதே போன்று மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, மேகாலயா போன்ற மாநிலங்களில் செய்தது. இப்படி எம்.எல்.ஏக்களை பஞ்சாபிலும் வாங்கிவிடலாம் என்று நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியை உடைத்துவிட்டதாக கூட கூறுவார்கள். பணபலத்தின் மூலம் கட்சிகளை உடைக்க முற்பட்டால், ஜனநாயகத்தில் இவை மிகவும் மோசமான அறிகுறிகள் என்றார் பக்வந்த் மன்.

ஆனால் இவரின் குற்றச்சாட்டுகளை வெறும் கற்பனை என்று நிராகரித்துள்ளார் பஞ்சாப் பாஜக பொதுச்செயலாளார் ஜீவன் குப்தா. இந்த குற்றச்சாட்டுகள் ஆம் ஆத்மியில் தனது சொந்த முக்கியத்துவத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டுமே. சமீபகாலமாக, ஆம் ஆத்மி கட்சியில் ஓரங்கட்டப்பட்டதால், பாஜக மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர் முன் வைக்கிறார் என்றும் கூறினார் குப்தா.

source https://tamil.indianexpress.com/india/was-offered-money-cabinet-berth-to-join-bjp-says-punjab-aap-president-bhagwant-mann-379223/