புதன், 9 ஆகஸ்ட், 2017

​வேலூரில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி ஆணையர் கைது..!! வேலுாரில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி ஆணையர் கைது செய்யப்பட்டார். வேலூர் வேலப்பாடியை சேர்ந்த ஒப்பந்ததாரர் பாலாஜி, கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்களை அனுப்பியுள்ளார். இதற்காக அவருக்கு மாநகராட்சி நிர்வாகம் 10 லட்சத்து 23 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த தொகையை வழங்க ஆணையர் குமார் 22 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் பாலாஜி புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, லஞ்ச பணத்தை பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆணையர் குமாரை கைது செய்தனர். மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை நிறுத்தம்!


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த டிரைகோஸ்டோமி சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அவரது தொண்டைப் பகுதியில் சிறு துளையிட்டு வைக்கப்பட்டிருந்த குழாயும் அகற்றப்பட்டுள்ளது. 

முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மருந்துகளால் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற, கடந்த டிசம்பர் மாதம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் நோயை சரிசெய்ய தொண்டையில் சிறு துளையிட்டு, ஒரு குழாய் பொருத்தி மருத்துவர்கள் டிரைகோஸ்டோமி சிகிச்சை அளித்தனர். 

சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய கருணாநிதி, மருத்துவர்களின் அறிவுரைப்படி தொண்டர்களை சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, டிரைகோஸ்டோமி சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. கருணாநிதியின் தொண்டைப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிறு குழாயும் தற்போது அகற்றப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேற்று நேரில் சந்தித்தார். அப்போது ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்று திரும்பியது குறித்து அவரிடம் கி. வீரமணி தெரிவித்து வாழ்த்து பெற்றார். இதேபோல், நேற்று கருணாநிதியை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றார்.