வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

“ஹிட்லரிடம் இருந்து 669 சிறார்களை காப்பாற்றிய மனிதர்!” August 11, 2017

“ஹிட்லரிடம் இருந்து 669 சிறார்களை காப்பாற்றிய மாமனிதர்!”


“தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரே, அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!”. பள்ளிப் பருவத்தில் நாம் எல்லோரும் படித்த ‘நெல்லுக்கிரைத்த நீர்’ எனும் ஔவை பாடலின் வரிகள் இவை. நல்லவர் ஒரே ஒருவர் இருந்தாலும் அவருக்காவே உலகில் மழை பொழிகிறதாம்.

நிக்கோலஸ் வின்டன் (Nicholas Winton). இந்த பேரை நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ‘பிறர் தெரிந்துக் கொள்ளும் வகையில் அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?’.  இக்கேள்வியை இப்படி மாற்றிக் கேட்போம், ‘பிறர் தெரிந்துக் கொள்ளும் வகையில் தன்னை எப்படி விளம்பரப்படுத்திக் கொண்டார் அவர்?’...

ஈகை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டுமெனில், வலது கை தருவது இடது கைக்கு தெரியக்கூடாது என்பர் சான்றோர். 1000 ரூபாய்க்கு செய்யும் ஈகையை 10,000 ரூபாய் செலவு செய்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் உலகம் இது. இன்றைய டிஜிட்டல் உலகில் இப்போக்கு பன்மடங்கு கூடிப்போயுள்ளது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். சுய விளம்பரம், சுய தம்பட்டம், தன்னை முன்னிறுத்தும் போக்கு, தனது இருப்பை பதிவு செய்யும் போக்கின் உச்சமாய் பிணத்தின் முன் நின்று செல்ஃபி எடுத்து உடனுக்குடன் பேஸ்புக், ட்விட்டரில் பதிவு செய்யுமளவு நிலை சென்றுவிட்டது.

இந்த அவசர உலகிற்கு நிக்கோலஸ் சொல்லப்போகும் செய்திதான் என்ன? தான் செய்த ஈகைகளின் பயனாய் 106 வயது வரை வாழ்ந்தார் என்பதா? அவர் பிற மானுடர்களைப் போல  “இரு”க்கவில்லை - “வாழ்ந்தார்” - “வாழ்கிறார்” - “இனியும் வாழ்வார்” என்பதே இச்செய்தி சொல்லும் வாழ்வியல் பாடம். இருத்தலுக்கும் வாழ்தலுக்கும் வித்யாசமுண்டு தானே.

சூழல் 1 :

2009-ம் ஆண்டின் மே மாதம். கை நீட்டும் தூரத்தில் ஈழத்தில் தமிழ்ச் சொந்தங்களின் வீடுகள், பள்ளிகள் என எங்கும் நீக்கமற குண்டுகள் விழுந்துக் கொண்டிருக்க கையறு நிலையில் ஏதும் செய்ய முடியாமல் வீடுகளிலும், வீதிகளிலும் கதறிக் கொண்டிருந்தோம். முள்ளி வாய்க்காலுக்கு முன்பாக காப்பாற்ற முடியாவிட்டாலும், பின்னரேனும் ஏதேனும் செய்துவிடுவோம் என ஏதேதோ முயற்சிகள் மேற்கொண்டோம். உலகமே நவ துவாரத்தையும் பொத்தி வேடிக்கை பார்த்தபோது, ‘தமிழருக்காக தமிழன் தான் போராட வேண்டும்’ என ஆவன செய்ய புலம்பெயர் தமிழர்களும், தமிழகத்திலுள்ள தமிழர்களும் இறுதிவரை போராடியது பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கிவைத்த அங்கவை, சங்கவை கையறு நிலையில் நீட்சி.


சூழல் 2 :

1939... இரண்டாம் உலகப்போர் உக்கிரத்தில் இருந்த காலக்கட்டம். ஏகாதிபத்தியங்களின் லாபம் ஈட்டும், நாடு பிடிக்கும் வெறியில் வேட்டைக்காடாக உலகம் மாறியிருந்த காலக்கட்டம்... கொடுங்கோலன் ஹிட்லர் தனது நாட்டின் சிக்கல்களுக்கு யூத இனத்தை காரணமாக கைக்காட்டி, கொன்றொழித்துக் கொண்டிருந்த காலக்கட்டமும். ஐரோப்பாவில் இருந்த யூதர்களில் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் கொன்றொழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. புத்திஜீவிகள் அதிகம் கொண்ட இனம், செல்வ செழிப்பு மிகுந்த இனம், ஆதிக்கம் செலுத்தும் இனம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், தன்னின அழிப்பையே தடுக்க முடியாத நிலையிலேயே இருந்தது யூத இனம்.

மேலே குறிப்பிட்ட இரு சூழல்களின் சம்பவங்களுக்கும் அடிப்படை வித்யாசங்கள் இருக்கலாம். எது எவ்வாறாயினும் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது, பழம்பெருமையும், தொன்மையான பண்பாடும் கொண்ட இரு இனங்களும் அதை தடுக்க இயலாத கையறு நிலையிலேயே இருந்தன. 

இரண்டாம் உலகப்போர் சூழல், ஹிட்லரின் ஆரிய இனவெறி என இத்தகைய இக்கட்டான சூழலில் பிறரைப் போல் புலம்பி தீர்க்காமல், தானே நேரடியாக செயலில் இறங்கி 669-க்கும் மேற்பட்ட சிறுவர்களை மீட்டு, புலம்பெயர் நாட்டில் வாழ்வளித்ததும், அதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக (மனைவி உட்பட) யாருக்கும் சொல்லி தற்பெருமை தேடாமல் இருந்த பெருந்தன்மையுமே நிக்கோலஸ் வின்டனை மாமனிதராக உயர்த்தியுள்ளது எனலாம்.



இங்கிலாந்தின் மேற்கு ஹாம்ப்ஸ்டடில் 1909 மே 19ம் நாள் நிக்கோலஸ் வின்டன் ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட யூத குடும்பத்தில் பிறந்தார். வின்டன் சிறுவனாக இருந்தபோதே  அக்குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியது. இளமையில் பங்குச்சந்தை தரகராக வின்டன் பொருளீட்டினார்.

1938 டிசம்பரில் மார்ட்டின் பிளாக் எனும் நண்பர் வின்டனுக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். பனிச்சறுக்கில் விடுமுறையை கழிப்பதற்கு பதில் செக்கோஸ்லோவாக்கியா செல்லுமாறு கேட்டுக்கொண்டார். மார்ட்டின் பிளாக் இங்கிலாந்தின் அகதிகள் குழுவுடன் சேர்ந்து ஏற்கனவே அங்கு சென்றிருந்தார். அதே ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டிருந்த அக்குழு ஜெர்மனியின் ஆரிய இனவாதத்தால் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் யூதர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

மார்ட்டினின் கோரிக்கையை ஏற்று அகதிகள் முகாம்களை பார்த்த வின்டன், அடுத்தடுத்த கட்டங்களாக அகதிகள் மீட்பிலும் அவர்களது வாழ்வை புணரமைப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  
 

ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் யூதர்களுக்கு எதிராக 1938 நவம்பரில் நடந்த கிரிஸ்டால்நாச் கலவரங்களின் போது அதற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார். இங்கிலாந்தில் இருந்த யூத ஏஜென்சிகள் சில ‘குழந்தைகள் இடப்பெயர்வு’ எனும் பெயரில் மேற்கொண்டிருந்த 10,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு பிரிட்டனில் குடியமர்த்தும் பணி குறித்து கேள்வியுற்ற வின்டன், அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டார்.   



பிரிட்டன் அகதிகள் குழுவின் பெயரை பயன்படுத்தி, அனுமதியில்லாமல் உடனடியாக குழந்தைகள் பிரிவு ஒன்றைத் தொடங்கிய வின்டன், செக்கோஸ்லோவாகியாவில் இறந்துக் கொண்டிருந்த ஏராளமான குழந்தைகளை மீட்டு இங்கிலாந்தில் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார். காப்பாற்றப்பட்டவர்களில் மிகப்பெரும்பாலானோர் ஹிட்லரின் ஆரிய இனவாதத்திற்கு பலியாக்கப்பட்ட யூதகுழந்தைகள். 

செக் குடியரசின் தலைநகர் Prague-ல் வின்டனின் ஹோட்டல் அகதிகளாக குழந்தைகளை அழைத்து செல்வதற்கான விண்ணப்பங்கள் கொண்ட பெற்றோர்களால் நிரம்பி வழிந்தது. கண்காணா தூரம் எங்கு சென்றேனும் தங்கள் குழந்தைகள் உயிருடன் இருந்தால் போதும் என்பதே தாய்-தந்தையரின் கடைசி எதிர்பார்ப்பு.

Prague-ல் இருந்து லண்டன் சென்ற வின்டன் குழந்தைகளை மீட்டு லண்டன் கொண்டு வருவதற்கும், குழந்தையொன்றுக்கு 50 பவுண்ட்கள் என்ற இங்கிலாந்தின் உத்தரவாதத் தொகையையும் திரட்டுவதற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டார். பகல் நேரத்தில் பங்குச்சந்தை தரகர் வேலையை பார்த்துக் கொண்டே மீதி நேரங்களில் நிதி சேகரிப்பிலும், அகதிகளான குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆர்வமாய் உள்ளவர்களையும் சந்தித்து பேசி, அக்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். 

செக் குடியரசின் பகுதிகளை ஜெர்மன் கைப்பற்ற தொடங்குவதற்கு முதல்நாள், அதாவது மார்ச் 14, 1939-ல்  வின்டனின் தீவிர முயற்சியின் காரணமாக prague-ல் இருந்து அகதிகளான குழந்தைகளை ஏற்றிக் கொண்டு முதல் புறப்பட்ட விமானம், லண்டன் சேர்ந்தது. விமான நிலையத்தில் காத்திருந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விண்ணப்பத்தி தம்பதியர்கள் அக்குழந்தைகளை தத்தெடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, 7-க்கும் மேற்பட்ட முறை ரயில் மற்றும் கடல் வழியாக செக்குடியரசில் இருந்து ஜெர்மனியை கடந்து லண்டனுக்கு குழந்தைகளை உயிருடன் கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வின்டன் திறம்பட மேற்கொண்டார். 1939 மார்ச் 14-ல் தொடங்கிய வின்டரின் முதல் குழந்தைகள் மீட்பு உக்கிரமான போர் உள்ளிட்ட காரணங்களால் 1939 ஆகஸ்ட் 2ம் தேதியுடன் தடைபட்டது. 

மறைக்கப்பட்ட மாமனிதனின் மனிதம் :

வின்டனின்   முயற்சியால் ஏராளமான குழந்தைகள் லண்டனில் நல்வாழ்வு பெற்ற நிலையில், அது குறித்து வின்டர் பெரிதாக பெருமிதம் கொள்ளவோ, தற்புகழ்ச்சியில் ஈடுபடவோ இல்லை. மனைவியிடம் கூட இது குறித்து வின்டன் ஏதும் தெரிவிக்காதது ஆச்சர்யம் அளிக்கும் ஒன்று தான். 1988ம் ஆண்டு படங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய பெரிய நோட்டு ஒன்றை வின்டனின் மனைவி வீட்டில் இருந்து எதேச்சையாக கண்டெடுத்தார். அதில், வின்டன் மீட்ட குழந்தைகளின் படங்கள், அவர்கள் எங்கு பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர் என்பது உட்பட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருப்பதை கண்டு அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். வின்டனின் முயற்சியால் மீட்கப்பட்டு நோட்டில் பதிவு செய்யப்பட்டிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை 664. 




தான் கண்டெடுத்த தகவல்களை வின்டனுக்கு தெரியாமல் ஊடகவியலாளர் ஒருவரிடம் அவரது மனைவி வழங்கினார். 664 குழந்தைகளை காப்பாற்றி வாழ்வளித்த மாபெரும் மாந்தநேயனின் வாழ்வு யாருக்கும் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதால் இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். தன்னை குறித்து தான் நிகழ்ச்சி நடக்கிறது என்பதே தெரியாமல் வின்டன் அந்நிகழ்ச்சியில் பார்வையாளராக அமர்ந்திருந்தார். திடீரென பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து கை தட்டுவதை பார்த்து குழம்பிய வின்டன், பின்னர் தான் புரிந்து கொண்டு நெகிழ்ந்து போனார். நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களாக அழைக்கப்பட்டிருந்த அனைவரும் வின்டனால் மீட்கப்பட்டு வாழ்வளிக்கப்பட்டவர்கள் என்பது தான் சுவையில் உச்சம்.

வின்டனால் மீட்கப்பட்டு வாழ்வளிக்கப்பட்டோர் குறித்து விவரிக்கும் “The Power of Good: Nicholas Winton” எனும் ஆவணப்படம் 2002-ல் வெளியானது. இந்த ஆவணப்படக் குழுவினர் வின்டனால் மீட்கப்பட்ட மேலும் 5 பேரை அடையாளம் கண்டனர். மேலும் ஏராளமானோரை வின்டன் மீட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

முக்கியமான விடயம் என்னவெனில், வின்டனின் சாதனைகளை அங்கீகரித்து நெகிழ்ச்சியுடன் இஸ்ரேல் பிரதமர் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், Prague-வின் குடிமகன் என சிறப்பிக்கப்பட்டுள்ளார். இந்த பட்டங்கள் மற்றும் பாராட்டுகளும் வின்டனின் எளிமையை எந்த வகையிலும் அசைக்கவில்லை. அவர் இந்த புகழ் போதையையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் எளிமையாகவே குடும்ப வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். 

2003-ல் வின்டனுக்கு மிக உயரிய “சர்” பட்டம் வழங்கி இரண்டாம் எலிசபெத் பெருமைபடுத்தினார். மனிதகுலம் உள்ளவரை நினைவுக்கூற வேண்டிய மகோன்னத பணியை மேற்கொண்ட வின்டன் தனது 106 வயதில் அதாவது ஜூலை 1, 2015 அதிகாலை தூக்கத்திலேயே இயற்கையுடன் இரண்டறக் கலந்தார்.