செவ்வாய், 19 செப்டம்பர், 2017

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் விளக்கம்! September 19, 2017


எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் விளக்கம்!


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த சபாநாயகர் தனபாலின் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தவறான தகவலை தந்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியது தவறு என்றும் தனிக்கட்சியாக செயல்பட வாய்ப்புள்ளதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் விளக்கமளித்துள்ளார். 
சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் அளித்த பதிலை ஏற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு எடியூரப்பா வழக்கை முன்னுதாரணமாக காட்ட முடியாது என்று கூறியுள்ள சபாநாயகர், ஆளுநரை சந்தித்த பின்னர் 18 எம்.எல்.ஏக்கள் தலைமறைவாக இருந்தது ஏன்? என்றும் தனது உத்தரவில் கேள்வி எழுப்பியுள்ளதை அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

ஆளுநரிடம் அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக ஜக்கையன் தெரிவித்துள்ளதாக விளக்கமளித்துள்ள சபாநாயகர் தனபால், தினகரன் ஆதரவாளர்கள் தாங்கள்தான் உண்மையான அதிமுக என தவறான தகவல்கள் மூலம் நம்பவைத்து தன்னை முதல்வருக்கு எதிராக கையொப்பமிட செய்ததாக ஜக்கையன் கூறிய விளக்கத்தை தனது உத்தரவில் மேற்கோள் காட்டியுள்ளார். 

திமுகவுடன் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தொடர்பில் இருந்ததற்கு ஜக்கையன் அளித்த விளக்கக் கடிதம் பூர்வாங்க ஆதரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தனது உத்தரவில் சபாநாயகர் தெரிவித்துள்ளது அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.