வியாழன், 1 மார்ச், 2018

21ம் நூற்றாண்டிலும் நடைபெறும் சாதிய வன்கொடுமை அவலம்..! March 1, 2018

Image

திருப்பூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரை, ஊர் மக்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள தீத்தாம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வெள்ளாடுகள், அவரது தோட்டத்திற்கு அருகில் உள்ள மற்ற சமுதாயத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து மேய்ந்துள்ளது. இந்நிலையில் ஆடுகள் தவறுதலாக சரஸ்வதிக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து மேய்ந்ததற்கு சக்திவேல் குடும்பத்தினர், சரஸ்வதியின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரினர்.

ஆனாலும் திருப்தியடையாத சரஸ்வதி, கடந்த  பிப்ரவரி மாதம் 15ம் தேதி சாதி பஞ்சாயத்தை கூட்டியுள்ளார். அங்கு ஊர்பொது மக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், சக்திவேல் மனைவி தேவியையும் அவரது மகள் மலர்விழியையும் சரஸ்வதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, ரூ.5000 அபராதம் செலுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளனர். மேலும், சக்திவேல் மகன் சதீஷையும் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி காவல் நிலையத்தில் புகார் செய்தும், கடந்த 12 நாட்களாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று மனு அளித்தனர்.