வெள்ளி, 2 மார்ச், 2018

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வழிகாட்டுதல்கள்! February 17, 2018

Image
உயர்நிலை பள்ளிப்பருவத்தைப் பற்றி எப்பொழுதாவது நாம் சிந்திக்க நேர்ந்தால், அந்த சமயத்தில் நடந்த அனைத்து இனிமையான நிகழ்வுகளும் அடுக்கடுக்காய் நம் மனதில் தோன்றும். நண்பர்கள், சுற்றுலா, சுவையான கேன்டீன் உணவு, முதல் காதல், ஆசிரியர் வரவில்லையெனில் நடக்கும் கொண்டாட்டம், கேலி, விளையாட்டு விழா, ஆண்டு விழா, குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம் போன்ற  பல விஷயங்களை உள்ளடக்கியதே உயர்நிலை பள்ளிப்பருவம். இவற்றை பற்றி சிந்திக்கும்பொழுது, நம் மனதில் எல்லையற்ற ஆனந்தம் ஏற்பட்டாலும், கண்களின் ஓரத்தில் ஏற்படும் சிறுதுளி கண்ணீர் அவை மீண்டும் கிடைக்கப்பெற முடியாதவை என்பதை நினைவுபடுத்தும். இவை அனைத்தும், நம் நினைவுகளாக பல ஆண்டுகள் கடந்த பின்னும் நம் மனதில் இடம்பெற்றிருக்கும். ஆனால், மாணவர்கள் விரும்பாத விஷயமாகவும், குழந்தைகளின் விபரீத நடவடிக்கைகளால் பெற்றோர்க்கு  மன உளைச்சல் உண்டாக்கும் விஷயமாகவும் பொதுத்தேர்வுகள் இருக்கின்றன. பொதுத்தேர்வுக்கு  இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இக்கட்டுரையில் பொதுத்தேர்வுகள் பற்றி நாம் பார்க்கப்போகிறோம். பொதுத்தேர்வு குறித்து பல காலமாக நிலவி வரும் மாயை மற்றும் தவறான கருத்துக்கள் குறித்து, ஒரு பெரிய மாற்றத்தை இக்கட்டுரை ஏற்படுத்தும்.

தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அம்மாணவரின் மீது எண்ணற்ற எதிர்பார்ப்புகளை திணிக்காத வரையில், பொதுத்தேர்வு என்பது அவ்வளவு மன உளைச்சளான விஷயமாகவோ, விரும்பத்தகாத விஷயமாகவோ இருக்காது. பொதுத்தேர்வுகள் குறித்து தேவையில்லாத விளம்பரங்கள் ஏற்படுத்தப்படாமல் இருந்தால்,  பள்ளிகளில் நடத்தப்படும்  பிற தேர்வுகள் போலவே பொதுத்தேர்வும் இருந்திருக்கும். தகுந்த அளவிலான தூண்டுதலும் பதட்டமும் இருந்தால் மட்டுமே தேர்வுகளை நன்றாக எழுத முடியும் என்று உளவியலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான அல்லது மிகவும் குறைந்த அளவிலான தூண்டுதல் தேர்வை நன்றாக எழுதுவதற்கு உதவியாக இருக்காது என்றும் அவர் கூறியிருந்தார். அதிகப்படியான தூண்டுதல், பதட்டத்தையும் அதே சமயத்தில், குறைவான தூண்டுதல் மாணவர்களிடம் மந்த நிலையை ஏற்படுத்தும். இந்த இரண்டு காரணங்களாலும், ஒரு மாணவனால், நல்லபடியாக தேர்வை எதிர்கொள்ள முடியாது.

‘நான் தேர்ச்சி பெற மாட்டேன்’,  ‘தேர்வின்போது எனக்கு மறந்துவிட்டால் என்ன செய்வது’ போன்ற எதிர்மறையான சிந்தனைகள், மாணவர்களிடத்தில் தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கும். அதனால், மாணவர்களிடையே எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களை விதைக்கவேண்டும்.

ஆரோக்கியமாக இருக்கும் மாணவர்க்கு,  திடீரென்று தேர்வு நேரங்களில் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். இதற்கான காரணம் நமக்கு தெரியாது. தேவையற்ற பதட்டம், நரம்புமண்டலத்தை பாதிப்படையச்செய்து, தேவையற்ற பயத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், தலைவலி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். இதுவே, திடீர் உடல்நிலை குறைபாட்டிற்கான காரணம் என்று உளவியல் வல்லுநர் சஹானா (WOW-Mind & Behavioural Clinic) தெரிவிக்கிறார்.

அதுமட்டுமல்லாது, ஒருமணி நேரத்திற்குள் மூன்று பக்கங்களை எழுதி முடிக்க வேண்டும் என்பது போன்ற சிறு இலக்குகளை தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அவர்களுக்குள்ளே வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய இலக்கு சிறியதாக இருந்தால் மட்டும் போதுமானது. அதைவிட்டு, ஒரு மணி நேரத்திற்குள் ஒரு அத்தியாயத்தை (Chapter) முடிக்கவேண்டும் என்பது போன்ற இலக்குகள் தேவையற்றது. இவ்வாறான இலக்குகள், மாணவர்களிடையே தன்னம்பிக்கையை குறைப்பது மட்டுமல்லாமல், சீக்கிரம் எழுதி முடிக்கவேண்டும் என்ற மன உளைச்சலையும் உருவாக்கும் என்றும் சஹானா தெரிவிக்கிறார்.

தேர்வை எதிகொள்வதற்கு தயாராக மாணவர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், தேர்வை பற்றிய எதிர்மறை எண்ணங்களை விலக்கவேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே அவர்களது திறமையை முடிவு செய்துவிடாது என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் வலுப்பெற வேண்டும். பொதுத்தேர்வுகளில் எடுக்கப்படும் மதிப்பெண்கள், ஒரு கல்லூரியிலோ அல்லது நிறுவனத்திலோ சேருவதற்கான ஆதாயமே தவிர, அது அவர்களின் திறமையை முடிவு செய்யாது.

தேர்வினை பயமின்றி எதிர்கொள்ள சில முக்கியமான வழிமுறைகளை உயிரியல் ஆசிரியர் சவுந்திரபாண்டியன் தெரிவித்துள்ளார். 


பதட்டமடையாமல், தேர்வை நன்றாக எதிர்கொள்வதற்கான வழிகள் :

1. பொதுத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர், கடந்த வருட வினாத்தாள்களுக்கான விடைகளை  ஒருமுறை படித்துவிட வேண்டும். புதிதாக பாடங்களை படிக்காமல், ஏற்கனவே படித்தவற்றை திரும்பிப் படிக்க வேண்டும்.

2. தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர், எதையும் புதிதாக படிக்கக்கூடாது. படித்தவற்றை மறுபடியும் மறுபடியும் நன்றாக அசைபோடவேண்டும்.

3. தேர்வுக்கு ஒருநாள் முன்னர், தேர்வை பற்றிய பயம் மாணவர்களிடையே இல்லாமல், நேர்மறையான விஷயங்களை மட்டுமே நினைக்க வேண்டும்.

4. படிப்பதற்கு முன்பு, அதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு முறையும் பொருட்களை எடுப்பதற்காக செல்வது, நேரத்தை வீணாக்கும்.

5. தேர்வு அறையில், மாணவர்கள் தங்களின் இருக்கை, மேஜை முதலியவை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். மேலும், தேர்வு அறையில் அமைதியான சூழல் நிலவுகிறதா என்றும், வினா மற்றும் விடைத்தாளில் அனைத்தும் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். அப்படி ஏதாவது தவறுகள் இருந்தால், உடனடியாக தேர்வறை கண்காணிப்பாளரிடம் அதுபற்றி தெரிவித்துவிடுவது நல்லது.

6. தேர்வுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தேர்வறைக்குள் எடுத்துச் செல்லவேண்டும்.

7. விடையளிப்பதற்கு முன்னால், வினாத்தாளை இரண்டு முறையாவது வாசித்து, கேள்வியின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.

8. விடை தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதிவிட்டு, பின்னர் விடை தெரியாத கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். ஒரு பகுதிக்கான விடையை எழுத தொடங்கிவிட்டால், அந்த பகுதியை முழுவதுமாக முடித்துவிட்டுத்தான் அடுத்த பகுதிக்கு செல்லவேண்டும். 
அதுமட்டுமல்லாமல், தேர்வு அறையை விட்டு வெளியே வந்ததும், விடைகள் குறித்து நண்பர்களிடம் பகிரக்கூடாது. அவ்வாறு பகிரும்பொழுது நாம் எழுதியிருந்த விடை தவறாக இருந்தால், தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். எனவே, இதுபோன்று செய்யாமல் இருப்பது நல்லது.

மேலும், பதட்டம் ஏற்படாமல் இருக்க தியானம் செய்யலாம் என உளவியலாளர் Dr.C.அன்புதுரை (WOW-Mind & Behavioural Clinic) தெரிவிக்கிறார். மாணவர்கள், நேராக அமர்ந்து, கண்களை மூடி, கைகளை தொடையில் வைத்தவாறு தியானம் செய்யவேண்டும். அவ்வாறு தியானம் செய்யும்பொழுது, மூச்சுக்காற்றினை உள்ளிழுப்பதையும் , வெளிவிடுவதையும் கவனிக்க வேண்டும். தியானம் செய்யும்பொழுது, அவர்களுக்கு விருப்பமான கடவுளையோ, அமைதியான இயற்கை சூழலையோ நினைக்கவேண்டும். பின்னர், மெதுவாக அவர்களின் பழைய நிலைக்குத் திரும்பி மெதுவாக கண்களை திறக்கவேண்டும். 15-லிருந்து 30 நிமிட தியானம் பல அதிசயங்களை நிகழ்த்தும். தேர்வு அறையில், உள்ளங்கை பயிற்சி செய்யலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம், நல்ல பலனை அடையலாம் என்று அன்புதுரை  தெரிவிக்கிறார்.
 
பல மாணவர்கள் பொதுத்தேர்வு பற்றி மிகவும் பதட்டமும் மன அழுத்தமும் அடைகின்றனர். அதிக மதிப்பெண்கள் வாங்கவேண்டும் என்று அவர்களின் பெற்றோர், பள்ளி நிறுவனம் மற்றும் சமூகம் எதிர்பார்ப்புகளை திணிப்பதால், சிறப்பு வகுப்புகளுக்கு அம்மாணவர் செல்வது மட்டுமல்லாமல் அதனால் அதிக மன உளைச்சல் அடைகின்றனர். ஆனால், தற்போதைய சூழ்நிலை மாறிவிட்டது. அவரவர் விருப்பத்திற்கேற்ப அனைவரும் செயல்படத் தொடங்கிவிட்டது மட்டுமல்லாமல், எண்ணிக்கையில் அதிகமாக உள்ள சமூகவலைதளங்கள், அனைவருக்கும் அனைத்தையும் எளிதில் வழங்குகிறது. இக்காலகட்டத்து மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றும் வேலையில்லாமல் இருக்கும் அவர்களது மூத்த சமுதாயத்தினை பார்க்கின்றனர். அதனால், வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் படிப்புகளை படிக்கவைக்க முன்வரும் வகையில் நமது சமுதாயத்தினை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் உளவியலாளர் Dr.திவ்யா கார்த்திக் தெரிவிக்கிறார்.

உள்ளங்கை பயிற்சி செய்வதற்கான முறை :

கண்களை மூடிக்கொண்டு, உங்களின் உள்ளங்கையை பயன்படுத்தி, கண்களை மறைத்துக்கொள்ளவும். உங்கள் கை, கண்களில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கைகளின் கீழ்பகுதியை கன்னத்திலும், மேல்பகுதியை நெற்றியிலும் படுமாறு வைத்துக் கொள்ளவும். எக்காரணத்தைக் கொண்டும், கண்களை தொடக்கூடாது.

மனதிற்கு அமைதியை தரும், இயற்கையான அல்லது கற்பனையான காட்சிகளை நினைத்துக்கொள்ளவும். அக்காட்சி குறித்து கற்பனை செய்யவும். அந்த இடத்தில் நீங்களும் இருப்பதாகவும், உங்கள் கண்களினால் அந்த காட்சியை பார்ப்பதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். இதை குறைந்தபட்சம் இரண்டு நிமிடமாவது காட்சிப்படுத்துங்கள். பின்னர், கண்களை திறந்து, முதலில் வினாத்தாளைப் பார்த்துவிட்டு, பின்னர் விடை எழுத ஆரம்பிக்கவும்.

தேர்வு அறையில் இதுபோன்று செய்வதன் மூலம், மனம் சாந்தி அடைந்து வினாக்களுக்கு எளிதில் விடை அளிக்க முடியும்.

மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அதிகமாக பார்த்துவிட்டோம். மாணவர்களின் தேர்வுக்கு மறைமுகமாக தாக்கங்களை ஏற்படுத்தும் சில விஷயங்களை பற்றி தற்பொழுது பார்க்கலாம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்தான், மாணவர்களின் தேர்வில் மறைமுக  தாக்கங்களை ஏற்படுத்துவோர்.

ஒவ்வொரு பெற்றோர் மற்றும் ஆசிரியரின் எதிர்பார்ப்பு, எந்த அளவிற்கு மாணவர்களை பாதிக்கிறது என்பதை ஒரு தடவையாவது நாம் சிந்தித்திருக்கிறோமா?

பல ஆண்டுகளாக தேர்வு பற்றிய மாயை இருந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள், அவர்களின் குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்.

பெற்றோர்களுக்கான சில குறிப்புகள் :

1. தங்கள் குழந்தைகள் என்ன உணவு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். அதிக அளவில் துரித உணவுகளை உட்கொள்ளவிடாமல், காய்கறிகள், பயிறு வகைகள் மற்றும் தானியங்களை கொடுக்கவேண்டும்.

2. குழந்தைகளை தினமும் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்ய சொல்ல வேண்டும். குறைந்தது அரை மணி நேரமாவது அவர்களுக்கு விருப்பமானவற்றை செய்யவிட வேண்டும். ஏனெனில், அதிகமாக வேலை செய்வது அவர்களுக்கு சோர்வை உருவாக்கும்.

3. குறைந்த மதிப்பெண்கள் எடுத்துவிட்டால், குழந்தைகளை திட்டுவதற்கு பதில், அவர்களுடைய பிரச்சனை என்னவென்று பொறுமையாக விசாரிக்க வேண்டும்.

4.உன்னால் முடியும், உன் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும் என்று அவர்களது குழந்தைகளுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை அதிகமாக உபயோகிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, பெற்றோரின் எதிர்பார்ப்புகளை குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது.

5. மனிதனுக்கு 8 மணிநேரத் தூக்கம் மிகவும் அவசியம். அதனால், உங்கள் குழந்தை தினமும் 8 மணி நேரம் தூங்குகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
6. மற்ற குழந்தைகளோடு, உங்கள் குழந்தையை ஒப்பிடக்கூடாது. உங்கள் குழந்தையின் திறனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

7. பெற்றோர், குழந்தைகளுக்கு சிறந்த உறுதுணையாக இருக்கவேண்டும். பெற்றோரின் விருப்பத்தை திணிக்காமல், தங்கள் குழந்தையின் விருப்பத்தை தெரிந்துக்கொண்டு அதை பூர்த்தி செய்வதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் செயல்திறனை அதிகரிக்க, பள்ளிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் :

1. மாணவர்களுக்கு அதிக அளவு எழுத்து பயிற்சியை கொடுப்பதற்காக மாதிரித்தேர்வுகளை நடத்த வேண்டும்.

2. வாரத்திற்கு ஒருமுறையாவது ஊக்கமூட்டும் சொற்பொழிவுகளை பள்ளி நிர்வாகம் நிகழ்த்த வேண்டும்.

3. மெதுவாக கற்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க வேண்டும்.

4. மருத்துவம், பொறியியல் மட்டுமல்லாமல், பல்வேறு படிப்புகள் குறித்தும் ஆசிரியர்கள் பேச வேண்டும்.

5. கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதோடு, உளவியல் மருத்துவர்களின் துணையுடன், அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்.

6. பெற்றோர் - ஆசிரியர் சங்கக் கூட்டங்களை நடத்தி, மாணவர்களுடைய செயல்பாடு குறித்தும், அவர்களுடைய முன்னேற்றங்கள் குறித்தும் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் பற்றி அதிகமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்பொழுது, நம்முடைய கல்வித்திட்டம் குறித்து சில தகவல்களை பார்க்கலாம்.

நாற்பது வருடங்கள் ஆகியும், அதிக மதிப்பெண் எடுத்தால்தான் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்கமுடியும் என்றநிலை இன்னும் மாறாமல் இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் குழந்தைகள் புத்தகங்களில் இருப்பதை மட்டுமே கற்கிறார்களே தவிர நடைமுறை கல்வியை கற்பதில்லை. புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை மட்டுமே கற்கும் குழந்தைகள், நிஜமாகவே அதனை புரிந்து கற்கிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. நம்முடைய கல்வித்திட்டமானது மதிப்பெண்களை மட்டுமே சார்ந்திருக்கிறது என்றும், கற்றல் முறையில் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது என்றும் உளவியலாளர்  அன்புதுரை தெரிவிக்கிறார். மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதையே குறிக்கோளாக வைத்திருக்கின்றனர். அவ்வாறு நடக்கவில்லை எனில், அவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர்.  மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும் கடுமையான சூழலையும் சமாளிக்கும் வழிகளை பதினொரு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே அவர்களின் ஆற்றலையும் அறிவையும் தீர்மானிக்காது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நம் குழந்தைகளின் மனநிலை அனைத்தையும் விட விலைமதிப்பானது என்பதை நாம் எப்பொழுது உணரப்போகிறோம்? நம் குழந்தைகளை ஏன் மருத்துவம் மற்றும் பொறியியல் மட்டும் கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவேண்டும்? கலை, இலக்கியம், விவசாயம், கோழி வளர்ப்பு, மேலாண்மை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,  ஊடகம் குறித்த படிப்புகள் எதற்கும் சலைத்தது அல்ல என்பதை எப்பொழுது இந்த சமுதாயம் புரிந்துகொள்ளப்போகிறது? நமது குழந்தைகள் தங்களுக்கு விருப்பமானவற்றை படிக்க எப்பொழுது சம்மதிக்கப்போகிறோம்? தற்போதைய கல்வித்திட்டத்தில் இந்த அரசு மாற்றத்தைக்கொண்டுவரவேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? நம் அடுத்த சந்ததியினரை பற்றிய அக்கறை உங்களுக்கு இல்லையா? செயல்திறனுடன் கூடிய நோக்கம் மாற்றத்தை உருவாக்கும். நம்முடைய கல்வித்திட்டத்தை மாற்றுவதற்கு அனைவரும் உழைத்து, கல்வி பாடங்களை கற்பதற்கு மட்டுமல்ல; அறிவை வளர்ப்பதற்கு என்பதை வெளிக்கொணர்வோம்.