
தமது தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை, தானும் தனது சகோதரி பிரியங்கா காந்தியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி உடனான கேள்வி-பதில் பகுதி இடம்பெற்றது. அதில் பேசிய ராகுல் காந்தி, தமது தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் பல ஆண்டுகளுக்கு தாங்கள் மன வலியுடனும், கோபத்துடனும் இருந்ததாகவும், எனினும் சில ஆண்டுகளுக்கு பின்னர் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டதாகவும் கூறினார். வன்முறை எந்த வடிவில் இருப்பினும் எத்தகைய காரணங்களைக் கொண்டும் தாம் அதனை விரும்புவதில்லை எனவும் ராகுல் தெரிவித்தார்.
அரசியலில் தீய சக்திகளுக்கு எதிராக இருந்தால் அவர்கள் ஒரு நாள் கொல்லப்படுவார்கள் என தனது உரையில் குறிப்பிட்ட ராகுல், இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் ஒரு நாள் இறப்பார்கள் என தங்களுக்கு தெரிந்திருந்ததாக கூறினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராகுல், பிரபாகரனின் சடலத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது தமக்கு இரண்டு விதமான உணர்வுகள் ஏற்பட்டதாக தெரிவித்தார். பிரபாகரனை ஏன் இவ்வாறு அவமானப்படுத்துகிறார்கள் என்று எண்ணியதாகவும், அவரது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் நிலையை நினைத்து வருந்தியதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.