செவ்வாய், 8 மே, 2018

வட மாநிலங்களை மீண்டும் தாக்கிய புழுதிப்புயல்! May 8, 2018

Image

கடந்த சில தினங்களுக்கு முன் வட மாநிலங்களில் சுமார் 130 பேரை பலிகொண்ட புழுதிப் புயல் நேற்றிரவு டெல்லி, ஹரியானா, உத்தபிரதேசம்  உள்ளிட்ட வட மாநிலங்களை மீண்டும் தாக்கியது. இடி மின்னலுடன் வீசிய புழுதிப் புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.  

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள 13 மாநிலங்களில் மணிக்கு 50 கிலோமீட்டரிலிருந்து 70 கிலோ மீட்டர்வரை பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசும் என்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் புழுதிப் புயல் வீசியது. இடி மின்னலுடன் கன மழை பெய்தது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஆர்.கே.புரம், மோதிபாக், பிரகதி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த புழுதிப் புயல் வீசியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சாலைகள் புழுதிப் புயல் மண்டலமாகக் காட்சியளித்தன. இடி மின்னலுடன் பெய்த கனமழையாலும் பலத்த காற்றாலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தன. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையையடுத்து டெல்லியில் தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. புழுதிப் புயலைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மீரட், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த புழுதிப் புயல் வீசியது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையையடுத்து பல்வேறு இடங்களில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தனர். 

ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் கடும் புழுதிப் புயல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை தாக்கியது. இதனையடுத்து மீட்பு பணியை துரிதப்படுத்தியுள்ள ஹரியானா அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்து உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளது.

சுமார் 130 உயிர்களை பலிகொண்ட பின்னரும் தனது கோரப் பசி நீங்காத புழுதிப் புயல் நேற்று வட மாநிலங்களை மீண்டும் ஒரு முறை அச்சுறுத்தியது.

Related Posts: