ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால் இடைத்தேர்தல் நடத்துவதற்கு பதிலாக அந்த கட்சியின் சார்பில் மற்றொரு நபரை சட்டமன்ற உறுப்பினராக ஏன் நியமிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர் மரணித்தால் இடைத்தேர்தல் நடத்தாமல் அதே கட்சியை சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இடைத்தேர்தல் நடத்துவதை தவிர்த்தால் மக்களின் வரிபணத்தை சேமிப்பதோடு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமலும் தவிர்க்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், வெற்றி பெற்ற கட்சியின் சார்பிலேயே சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்வதன் மூலம் இடைத்தேர்தல் காலத்தில் நடைபெறும் முறைகேடுகளையும் தடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே சமயம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நடைமுறைகள் பொருந்தாது என கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
source ns7.tv