வியாழன், 21 பிப்ரவரி, 2019

காஷ்மீரில் 18 பிரிவினைவாத தலைவர்கள், 155 அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்


ஸ்ரீநகர் : காஷ்மீரில் 18 பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் 155 அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

புல்வாமா தாக்குதலில்  44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா பகுதியில் கடந்த 14ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி கார்குண்டு தாக்குதலை நடத்தினார். இந்த சம்பவத்தில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் என்பதும் அவர் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் இருந்தபடி தாக்குதல்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

புல்வாமா தாக்குதல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் 

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்புதலைவர் யோகேஷ் சந்திரமோடி, மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.  இந்நிலையில் கிடைத்த தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வந்த என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதன் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.

18 பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்

இதனிடையே புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பிரிவினைவாத தலைவர்கள் 6 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை காஷ்மீர் மாநில நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கிலானி, யேசீன் மாலிக், அப்துல் கானி ஷா,முகமது பாட் உள்ளிட்ட 18 பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் 155 அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில அரசு நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

அரசின் வேற எந்த சலுகையை அவர்கள் பெற்று வந்தாலும் அதுவும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பிற்கான வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து ஆயிரம் காவலர்கள் மற்றும் 100 பாதுகாப்பு வாகனங்கள் வழக்கமான காவல் பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற ராணுவ வடக்கு பிராந்திய கமாண்டர் ரன்வீர் சிங் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு நடத்தினார். 
source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475255