தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு மஹாராஷ்டிரா வரையிலான நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது எனவும், இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்றும், தற்போதைய நிலையில் இருந்து 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகப்பட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source ns7.tv